எரிபொருள் விலை தொடர்பில் ஐ.தே.கவின் ஆலோசனை அரசுக்குத் தேவையில்லை

உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை வீழ்ச்சியின் பயனை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் ஐ.தே.கவின் ஆலோசனை எதுவும் தேவையில்லை என்று தெரிவித்துள்ள மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் நிவாரணம் குறித்து ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தங்கல்லையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர் ஐ.தே.கவின் எரிபொருள் சூத்திரம் அமுலில் இருந்தால், 12 ரூபாவினால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டு 2 ரூபாவினால் குறைக்கப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.

மேலும் கூறிய அவர்,

உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த நிலைமை குறித்து நாம் கவனம் செலுத்தி வந்தோம். குறுகிய கால ஏற்ற இறக்கத்திற்கமைய எரிபொருள் விலைகள் நிர்ணயிக்கப்படுவதில்லை. நீண்ட காலத்திற்கு இந்த நிலைமை நீடிக்குமானால் தேவையான முடிவுகளை எடுப்போம்.

பெப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்குமிடையில் போர்ச்சூழல் ஏற்பட்ட போது உலக சந்தையில் எரிபொருள் விலை பாரியளவில் உயர்ந்தது. அன்று ஐ.தே.க அரசு இருந்திருந்தால் 12 ரூபாவினால் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருக்கும். ஆனால், எமது அரசு நஷ்டத்தை பொறுப்பேற்று ஐந்து சதத்தினால் கூட விலையுயர்த்தவில்லை. ஆனால், விலைச்சூத்திரம் இருந்திருந்தால், இன்று எரிபொருள் விலை குறைந்திருக்கும் என ஐ.தே.க வினர் கூறி வருகின்றனர்.

விலைச்சூத்திரம் இருந்திருந்தால், பெப்ரவரியில் 12 ரூபாவினால் விலை அதிகரித்து மசகு எண்ணெய் வீழ்ச்சியுடன் 2 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டிருக்கும். இது எப்படி மக்களுக்கு நிவாரணமாக அமைய முடியும் என ஐ.தே.கவிடம் வினவுகிறேன்.

எரிபொருளுக்கு நிவாரணம் வழங்குமாறு கூறி ஐ.தே.க முதலைக் கண்ணீர் வடிக்கிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினதும் அரசாங்கம் மக்களை கஷ்டப்படுத்தும் அரசல்ல. மக்களுக்கு வழங்கக் கூடிய சகல சலுகைகளையும் வழங்க பின் நிற்க மாட்டோம். எரிபொருள் நிவாரணம் வழங்கமால் இழுத்தடிப்பதாக ஐ.தே.க குற்றஞ்சாட்டி வருகிறது. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எமக்கு ஐ.தே.கவின் ஆலோசனை தேவையில்லை.

உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் நன்மையை நாம் மக்களுக்கு வழங்குவோம். இது தொடர்பில் இன்று (11), நாளை (12) நடைபெறும். அமைச்சரவை கூட்டத்தில் விளக்கமளிப்பேன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!