இந்தியா வர அளிக்கப்பட்ட விசாக்கள் அனைத்தும் இன்று நள்ளிரவு முதல் ரத்து!

கொரோனாவைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு அதிரடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான விசா சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளின் பயணிகளுக்கும் வழங்கப்பட்டிருந்த விசாக்கள் ஏப்ரல் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.ஐநா.சபை அதிகாரிகள், சர்வதேச அமைப்புகள், வேலைவாய்ப்பு திட்ட விசாக்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

சீனா,இத்தாலி, ஈரான்,கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்று. பிப்ரவரி 15ம் தேதியில் இருந்து திரும்பிய இந்தியர்கள் உட்பட அனைத்து சுற்றுலாப் பயணிகளும் 14 நாள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதேபோல், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள அமெரிக்கா, அனைத்து ஐரோப்பிய நாடுகளின் பயணிகளுக்கும் தடை விதித்துள்ளது. நாளை இரவில் இருந்து ஒரு மாதம் இந்த தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்வோருக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது. அமெரிக்கர்கள்தான் எங்களுக்கு முக்கியம் என்று அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா கொரோனா வைரசை முறியடிக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு மட்டும் விலக்கு அளிப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!