உலகையே சோகத்தில் ஆழ்த்திய மரணம்: 3 பேருக்கு 125 ஆண்டு சிறை!

உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் படகுகளில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளை அடைகின்றனர். பல நேரங்களில் இந்த ஆபத்தான பயணங்கள் விபத்தில் முடிந்துவிடுகின்றன. அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டு சிரியா அகதிகள் சென்ற படகு துருக்கி கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வயது ஆண் குழந்தையான அய்லான் குர்தி உள்பட 12 பேர் பலியாகினர்.

குழந்தை அய்லான் குர்தி துருக்கி கடற்கரையில் முகம் புதைந்த நிலையில் பிணமாக கிடந்த புகைப்படம் உலகையே உலுக்கியது. அகதிகளின் துயரங்களை விவரிக்கும் விதமாக அமைந்த இந்த புகைப்படம் சர்வதேச அளவில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது.

இதையடுத்து, அந்த படகு விபத்து தொடர்பாக அகதிகளை சட்டவிரோதமாக படகில் அழைத்து சென்றதாக 3 பேர் துருக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் 3 பேர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் தலா 125 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!