“தேசிய அரசாங்கமே ரூபாவின் தொடர் வீழ்ச்சிக்கு காரணம்”

முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தின் காரணமாகவே அமெரிக்க டொலருக்கு நிகராண இலங்கையின் ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது என தேசப்பற்றுள்ள வல்லுணர்கள் அமைப்பின் பேச்சாளர் கலாநிதி நாலக கொட ஹேவ தெரிவித்துள்ளார்.

நாலக கொட ஹேவ மேலும்,

“வரலாற்றில் முதல் முறையாக ரூபாவின் பெறுமதி 160 ரூபாவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கு சிறந்த பெறுபேறாகவே காணப்படுகின்றது. இதன் தாக்கத்தினை நாட்டு மக்களே எதிர்கொள்ள வேண்டும்.

அரசாங்கம் ஆட்சியினை பொறுப் பேற்கும் போது உறுதியான மற்றும் பலமான பொருளாதார நிலைகளே காணப்பட்டது. தெற்காசியாவில் சீனாவிற்கு இணையான நிலையிலே இலஙகையின் பொருளாதார முகாமைத்துவங்கள் காணப்பட்டது. இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு கொழும்பு பங்கு சந்தைக்கு விருதுகள் கிடைக்கப் பெற்றது. இதனை காரணமாக கொண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் பல விற்பனை முதலீடுகளை மேற்கொண்டது. சிறந்த முகாமைத்துவத்தின் காரணமாக 2014 ஆம் ஆண்டு 1400 மில்லியன்களுக்கும் அதிகமான வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கப் பெற்றது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் சடுதியாக வீழ்ச்சியடைந்தது. நாளுக்கு நாள் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்த நிலையிலே காணப்பட்டது. 2017 ஆம் ஆண்டின் போது 16 வருடங்களுக்கு பிறகு பண பெறுமதியின் வீழ்ச்சி 3.1 சதவீதமாக காணப்பட்டதால் அனைத்து துறைகளிலும் வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டது. வெளிநாட்டு மூலதனங்கள் பாரியளவில் குறைவடைந்தது. இதன் காரணமாக மக்களின் மீதான வரிச்சுமை அதிகரிக்கப்பட்டது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததால் மீள் செலுத்த வேண்டிய கடன் தொகை 890 பில்லியனாக அதிகரிக்கப்பட்டடுள்ளது.

அரசாங்கம் தொடர்ந்து பொருளாதார முகாமைத்துவத்தினை முன்னெடுத்து செல்லாததால் பாரிய விளைவுகளையே சந்திக்க நேரிடும். இவ்விடயம் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். கடன் பெறுமதி அதிகரிக்கும் போது மக்களின் மீதான வரிச்சுமைகளே அதிகரிக்கப்படும் ஆகவே தேசிய அரசாங்கத்தில் மிகுதியாக உள்ள காலப்பகுதியில் முறையாக பொருளாதார முகாமைத்துவத்தினை மேற்கொண்டு வீழ்ச்சியடைந்துள்ள ரூபாவின் பெறுமதியினை எழுச்சி பெற செய்ய வேண்டும். அவ்வாறு இயலாவிடின் இயன்றவர்களுக்கு பொறுப்புக்களை கையளிக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!