தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 234 ஆக உயர்வு!

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தப்லிக் ஜமாத் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1,131 பேர் பங்கேற்றனர். இவர் களில் 80 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது நேற்று முன்தினம் தெரியவந்தது. இதையடுத்து இந்த மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் சோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்தது. இதையடுத்து அவர் களில் 515 பேர் கண்டறியப்பட்டனர். மற்றவர் களை கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 588 பேர் தாமாக முன்வந்து சுகாதாரத்துறையிடம் தங்களை பற்றி தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் அரசின் கோரிக்கையை ஏற்று தாங்களாகளே முன்வந்து சுகாதாரத்துறையிடம் தெரிவித்ததற்கு நன்றி. தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 77 ஆயிரத்து 330 பேர் உள்ளனர். மேலும் 4 ஆயிரத்து 80 பேர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பை முடித்து உள்ளனர். விமான நிலையங்கள் அருகே உள்ள முகாம்களில் 81 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்காக 11 அரசு ஆய்வு மையங்கள் மற்றும் 6 தனியார் ஆய்வு மையங்கள் என மொத்தம் 17 மையங்கள் உள்ளன. மேலும் 6 கொரோனா நோய் தொற்று பரிசோதனை மையங் கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 2,726 பேருக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 234 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்து உள்ளது. தமிழக மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட ‘வார்டில்’ 995 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இன்று (நேற்று) ஒரே நாளில் மட்டும் 110 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்து உள்ளது. இந்த 110 பேரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்தான். இதில் பர்மா மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த தலா ஒருவர் உள்ளனர். மற்ற அனைவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள். இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் மேலும் 110 பேர் கண்டறியப்பட்டு இருப்பதால், மாநாட்டில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 190 ஆக உயர்ந்து இருக்கிறது. இவர்கள் தவிர தமிழகத்தில் ஏற்கனவே 44 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களை தவிர இன்று (அதாவது நேற்று) வேறு யாருக்கும் கொரோனா நோய் தொற்று புதிதாக வரவில்லை. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 515 பேர் நேற்று முன்தினம் வரை அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அந்த மாநாட்டில் பங்கேற்ற மேலும் 588 பேர் அடையாளம் காணப் பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் மொத்தம் 1,103 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் தாமே முன்வந்து சுகாதாரத்துறையிடம் தகவல் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் தற்போது மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். டெல்லி மாநாட்டில் பங்கேற்று அடையாளம் காணப்பட்ட தமிழகத்தை சேர்ந்தவர்களில் 658 பேருக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப் பப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு நாளை (இன்று) தொண்டை மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்படும்.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,103 பேரின் முகவரி உள்ளிட்ட தகவல்கள் உள்ளன. அவர்கள் வீட்டில் உள்ளவர்கள், அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரிடமும் தற்போது சோதனை மேற்கொண்டு வருகிறோம். மேலும் அவர்கள் அனைவரின் வீட்டின் அருகே தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் செயல்படுத்த தொடங்கி உள்ளனர். அவர்கள் வீட்டின் அருகே 8 கி.மீ. சுற்றளவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக கொண்டுவரப்பட்டு, அங்கு 50 வீடுகளுக்கு ஒரு ஊழியர் என கணக்கெடுப்பு நடத்தப்படும். மேலும் கணக்கெடுக்கும் 4 ஊழியருக்கு ஒரு டாக்டர் போடப்பட்டு இந்த தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் தொடர்ந்து 2 நாட்களுக்கு நடைபெறும்.

தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்ட 110 பேர் 15 மாவட்டங்களில் உள்ளனர். இதில் கோவையைச் சேர்ந்த 28 பேர், தேனியைச் சேர்ந்த 20 பேர், திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த 17 பேர், மதுரையைச் சேர்ந்த 9 பேர், திருப்பத்தூரைச் சேர்ந்த 7 பேர், செங்கல்பட்டைச் சேர்ந்த 7 பேர், நெல்லையைச் சேர்ந்த 6 பேர், சிவகங்கையைச் சேர்ந்த 5 பேர், தூத்துக்குடி, காஞ்சீபுரம், ஈரோடு, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், சென்னை, கரூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 110 பேர் இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்த 2 நாட்களில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதேபோல் அதிகரித்தால் அதை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்போது தனிநபர் பாதுகாப்பு உடை, முக கவசங் கள் உள்ளிட்ட அனைத்தும் போதுமான அளவில் உள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள், தனியார் டாக்டர்களிடம் காணொலி காட்சி மூலம் உரையாடினோம். அவர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கினோம். இந்த மாதத்தில் பிரசவத்தை எதிர்ப்பார்க்கும் கர்ப்பிணிகளின் விவரங்களை அந்தந்த மருத்துவமனைகளில் வைத்து உள்ளனர். அவர்களுக்கு சுக பிரசவம் நடப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் தனியார் மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிகளின் பிரசவத்துக்கு ஏற்பாடு செய்ய ஆலோசனை வழங்கி உள்ளோம்.

வீட்டில் இருக்கும் முதியவர்களை முடிந்த அளவு தனிமையில் வைக்க வேண்டும். அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதியவர்கள் வெளியே வராமல் இருப்பது நல்லது. முதியவர்கள் இருக்கும் வீட்டில் இருந்து வெளியே சென்று வருகிறவர்கள், அவர்களை விட்டு விலகி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் உள்ள இடங்களில் சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை, போலீசார், தீயணைப்பு துறையைச் சேர்ந்தவர்களின் உதவியோடு கட்டுப்படுத்துதல் திட்டம் நடைபெறுகிறது. மேலும் அந்த பகுதி களில் இருக்கும் அனைத்து கட்டிடங்கள், தெருக்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து வருகிறோம். மேலும் அந்த பகுதிகளில் உள்ளவர்களை வெளியே செல்ல அனுமதிக்காததால், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!