அதிகரித்து வரும் கொரோனா தொற்று: தமிழகத்திற்கு இரண்டாம் இடம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 75 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மராட்டியமும், 3-வது இடத்தில் கேரளாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 75 பேரில், 74 பேர் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஆகும். மேலும் ஒருவர் வெளிநாடு சென்று வந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 86 ஆயிரத்து 342 பேர் உள்ளனர். மேலும் விமான நிலையங்களில் அருகே அரசு கண்காணிப்பில் 90 பேர் உள்ளனர். தமிழகத்தில் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பை 4 ஆயிரத்து 70 பேர் முடித்துள்ளனர். தமிழகத்தின் நேற்று (நேற்று முன்தினம்) கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக இருந்தது. இன்று (நேற்று) மேலும் 75 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 74 பேர் டெல்லி தப்லித் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். மேலும் ஒருவர் சென்னையை சேர்ந்தவர். அவர் ஏற்கனவே கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இருந்து டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட 1,103 பேருக்கும் சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகத்தில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 264 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த கோவை டாக்டருக்கும் நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் என்பது புதிய நோய். இதை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக உள்ளது. உலகில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகள் எடுக்கும் நடவடிக்கை குறித்தும், அங்கு நாளுக்கு நாள் எவ்வாறு பரவியது என்பது குறித்து ஆராய்ந்து உள்ளோம். கொரோனா என்பது மலேரியா, டைபாய்டு காய்ச்சல் போன்று பழைய நோய் இல்லை. இது சீனாவில் இருந்து தொடங்கப்பட்டு தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!