அமெரிக்காவில் கொரோனா தொற்று இல்லையென்று அனுப்பப்பட்ட சிறுமி உயிரிழந்த சோகம்!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்ட 13 வயது சிறுமி ஒருவர் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தை சேர்ந்தவர் 13 வயதான சார்லோட் பிஜி. இவரது தாயார் செவ்வாய் அன்று பகல் தமது மகள் இறந்து விட்டாள் என தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக போதைமருந்து எண்ணெய் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வந்தவராவார் சார்லோட் பிஜி.

மார்ச் துவக்கத்தில் சார்லோட் பிஜியின் குடும்ப உறுப்பினர்கள் பலர் திடீர் காய்ச்சலுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து மருத்துவரை நாடிய இந்த குடும்பத்தினரை, சுய தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைத்துள்ளார் மருத்துவர். இருப்பினும் கொரோனா பாதிப்பு தொடர்பில் சோதனை மேற்கொள்ளும் அளவுக்கு இவர்களின் அறிகுறிகளும் இருக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் ஏப்ரல் 3 ஆம் திகதி சார்லோட்டின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. உடனடியாக அவரை கொலராடோ ஸ்ப்ரிங்ஸ் சிறார்கள் மருத்துவமனைக்கு இட்டுச் சென்றுள்ளனர்.

அங்கே அவருக்கு கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உரிய பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர் குடியிருப்புக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். ஆனால் செவ்வாய் அன்று பகல் அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட, உடனடியாக அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்ப்பித்துள்ளனர். இந்த நிலையில் சார்லோட் சுவாச பிரச்னை மற்றும் திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். சார்லோட் பிறந்த 3 மாதத்தில் இருந்தே வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். 5 வயது இருக்கும் போது நாளுக்கு 300 முறை வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவர்களால் கோமாவில் வைத்திருந்தும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையிலேயே சார்லோட் தாயார் போதை மருந்து எண்ணெய் தொடர்பில் தெரியவந்து, அதன் மூலம் சிகிச்சையை முன்னெடுத்துள்ளார். இதனால் சார்லோட் பிஜி நாளுக்கு நாள் குணமடைந்தும் வந்துள்ளார். அதன் பின்னர் அவருக்கு வலிப்பு நோய் ஏற்படவில்லை என்பது மட்டுமின்றி, சாப்பிடவும் பேசவும் தொடங்கியுள்ளார். கடந்த 2013-ல் இவரது நிலை தொடர்பில் CNN சிறப்பு செய்தி ஒன்றை வெளியிட, அமெரிக்காவில் மருத்துவ காரணங்களுக்காக போதை மருந்து எண்ணெய் பயன்படுத்துவது தொடர்பில் பெரும் விவாதம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!