கொரோனாவால் நிலைகுலைந்த இங்கிலாந்து: ஒரே நாளில் 737 பேர் பலி!

உலகையே உலுக்கி வரும் கொரோனா உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அந்த முயற்சியில் பெருமளவு முன்னேற்றம் ஏற்படாமலேயே உள்ளது. இதற்கிடையில், உலகம் முழுவதும் இதுவரை 18 லட்சத்து 47 ஆயிரத்து 95 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 13 லட்சத்து 10 ஆயிரத்து 704 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 லட்சத்து 22 ஆயிரத்து 489 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 902 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயினை தொடர்ந்து வைரஸ் தற்போது இங்கிலாந்தையும் புரட்டி எடுத்து வருகிறது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து நாட்டில் 84 ஆயிரத்து 279 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 5 ஆயிரத்து 288 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 737 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 612 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்சுக்கு அடுத்த படியாக கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து 5-வது இடத்தை பிடித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!