ஈஸ்டர் பயங்கரவாதம்; பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க அரசு தவறிவிட்டது!

உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறியுள்ளது என்று இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இவ்வாறு இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும்,

மட்டக்களப்பு – சீயோன் தேவாலயம் உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் ஈஸ்டர் வழிபாடுகளின் போது மேற்கொள்ள்பட்ட குண்டுத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் பலர் படுகாயங்களும் அடைந்தனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட, தமது உறவுகளை இழந்தவர்கள் ஒரு வருடங்களை கடக்கும் நிலையில் இன்றும் அதன் பாதிப்பில் இருந்து வெளிவராமல் இருந்துவருகின்றனர்.

இந்த குடும்பத்திற்கு நீதியை பெற்றுக்கொடுக்கவோ அந்த குடும்பத்தின் கவலைகளை தீர்ப்பதற்கோ அரசுகள் எந்த நடவடிக்கையினையும் இதுவரையில் எடுக்கவில்லை. மாறிமாறி குற்றச்சாட்டுகள் மட்டுமே முன்வைக்கப்படுவதனை காணமுடிகின்றது.

பௌத்த மதத்தலங்களின் மீது தாக்குதல்கள் அக்காலப்பகுதியில் இடம்பெற்றிருந்தால் அரசாங்கம் இவ்வளவு பொறுமையுடன் தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருக்காது.

அந்த மதத்திற்கு வழங்கும் முக்கியத்துவத்தினையும் தேவைப்பாடுகளையும் ஏனைய மதங்களுக்கு வழங்காதது என்பது கவலைக்குரிய விடயமாகும். கண்டிதலதா மாளிகையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அந்த ஆலயத்தினை சூழவுள்ள பகுதிகள் போக்குவரத்து தடைசெய்யப்பட்டன.

அது இன்றுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இந்த நாட்டில் நடைபெற்றது என்ன என்பதை அனைவரும் அறிவார்கள்.

இந்நாட்டில் சிறுபான்மை சமூகத்திற்கு நீதியில்லை என்பதை பல சம்பவங்கள் எடுத்துக் காட்டியுள்ளது. 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப் படுகொலையுடன் தொடர்பு பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்று சர்வதேசத்திற்கே தெரியும்.

ஆனால் இங்கு நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட பொறுப்புக்கூறல், மீண்டும் நிகழாமை, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி போன்ற விடயங்களில் எதுவும் செய்யப்படவில்லை.

குறிப்பாக நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பில் சரியான வெளிப்படுத்தல்கள் இல்லாதநிலையே இந்த நாட்டில் காணப்படுகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் அரசாங்கம் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை.

இவ்வாறானதொரு நிலையிலேயே தமிழ் சமூகத்தின் மீது நடாத்தப்பட்ட எந்தவித செயற்பாடுகளுக்கும் நீதியை வழங்காத ஒரு அரசாங்கத்திடமே நாங்கள் நீதியை எதிர்பார்த்துநிற்கின்ற துர்ப்பாக்கிய இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தினை கொன்றொழித்தவர் அவர் செய்த படுகொலைகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு இந்த நாட்டின் நீதித்துறையினாலேயே குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவரை அந்த நாட்டின் ஜனாதிபதியே பொது மன்னிப்பு வழங்கியதும் இந்த நாட்டில்தான் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே ஈஸ்டர் தாக்குதலின்போது உயிர்நீர்த்தவர்களது குடும்பமும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நீதியை எதிர்பார்த்துள்ளனர். இவர்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது – என்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!