கொரோனா ஊரடங்கு: இங்கிலாந்து அரசிடம் உதவி கோரும் விபச்சார தொழிலாளர்கள்!

கொரோனா பரவிய நாடுகளில் எல்லாவற்றிலுமே ஊரடங்கு அமல் காரணமாக தொழில்கள் முடங்கிப்போய் பெரும்பாலான கூலித்தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதில், ஆதிகாலத்தில் இருந்தே மனித குலத்துடன் இணைந்திருக்கும் விபசார தொழிலும் பலத்த அடி வாங்கி இருக்கிறது. உலக நாடுகள் அனைத்திலுமே கொரோனா ஊரடங்கால் விலைமாதர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது நிலை குறித்து மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவர் கள் பரிதவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அண்மையில் வேலை இழப்பால் வருமானம் இன்றி அல்லாடும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அவசர நிதி உதவி வழங்குவதாக இங்கிலாந்து அரசு அறிவித்தது. இந்தப் பட்டியலில் விபசார தொழிலில் ஈடுபடும் விலைமாதர்கள் கூட்டமைப்பு இடம் பெறவில்லை. இதனால் அந்நாட்டின் விலைமாதர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதுபற்றி இங்கிலாந்தில் வாழும் விலைமாதர்கள் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் எங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து விட்டோம். மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி விட்டனர். மனைவியை விட்டு கணவன்மார்களால் அகல முடியவில்லை. எங்களுடன் போனில் பேசுவதற்கே அவர்கள் பயப்படுகிறார்கள். திருமணம் ஆகாத இளைஞர்களோ பெற்றோரின் கண்காணிப்பில் இருக்கின்றனர். செயலிகள் வழியாக எங்களுக்கு அழைப்பு வருவதும் அடியோடு நின்று போய்விட்டது.

இதனால் வாடிக்கையாளர்கள் யாரும் கிடைக்காமல், கையில் பணம் எதுவுமின்றி எங்களது நிலை படுமோசமாக உள்ளது. பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம். நாடு முழுவதும் எங்கள் கூட்டமைப்பில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேலான பெண்களின் கதியும் இதுதான். நாங்களும் வீட்டு வாடகை கொடுக்க வேண்டும். மின்சாரம், குடிநீர், போன் ஆகியவற்றுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய நெருக்கடியும் இருக்கிறது. எனவே அவசர பண உதவி பெறுவோர் பட்டியலில் எங்களையும் சேர்த்து வறுமையின் பிடியில் இருந்து மீட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!