கோத்தாவைக் கவனத்தில் எடுப்பேன் என்கிறார் மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தை, கவனத்தில் கொள்ளப் போவதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்கு வலுவடைந்து வரும் ஆதரவு குறித்து, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“அதிபராவதற்கு கோத்தாபய ராஜபக்சவுக்கு இருக்கும் ஆதரவை நான் அறிவேன்.

2020 அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளர் யார் என்று தீர்மானிக்கும் போது, கோத்தாபய ராஜபக்ச தொடர்பான பொதுமக்களின் கருத்தும் கவனத்தில் கொள்ளப்படும்.

எனக்கும் எனது சகோதரர்களுக்கும் இடையில் பிளவுகள் இருப்பதாக கூறப்படுவது பொய்.

எமக்குள் எந்த அதிகாரப் போட்டியும் கிடையாது. எனது சகோதரர்களுடன் இணைந்து நாட்டில் வணிகம் செய்வதாக குற்றம்சாட்டியவர்கள் தான் அவ்வாறு கூறுகிறார்கள்.

கூட்டு எதிரணியில் இருப்பவர்கள் ராஜபக்சக்கள் மட்டுமல்ல. ஏனைய பல அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!