ஊரடங்கை நீடித்தால் பொருளாதாரத்தை கடுமையாக தாக்கும்!

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டால், உள்ளூர் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அதனைக் கருத்தில் கொண்டே, ஊரடங்கைத் தளர்த்தும் முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்கவுடன், கொரோனா வைரஸ் ஒழிப்பு மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புதல் சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பங்கேற்றிருந்தார்.

இந்த கலந்துரையாடலில், கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “நாட்டின் பொருளாதாரம் பெரும்பாலும் மேல் மாகாணத்தில் இயங்கும் வணிகங்களை சார்ந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கச் சட்டத்தை தொடர்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அவ்வாறு தொடர்ந்து ஊரடங்கு நீடிப்பது நாட்டில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடி தீர்ந்ததும் இலங்கை புதிய சந்தைகளை குறிவைக்கும். சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக, முதலில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து வெளிவரும் நாடுகளை இலங்கை பின்பற்றும்.

உள்ளூர் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் வகையில் நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும், இலங்கை முயற்சிக்கும் என்றும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!