கொரோனா தடுப்புக்காக இலங்கைக்கு வரத் தயாராகிறது இந்திய இராணுவம்!

கொரோனா தடுப்புக்காக இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு தமது அணிகளை அனுப்பி உதவ இந்திய இராணுவம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை கையாள்வதற்கான திறன்களை அதிகரிக்க அந்த நாடுகளுக்கு உதவுவதற்கு இந்திய இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகங்களை அமைக்கவும், உள்ளூர் மருத்துவ நிபுணர்களுக்கு தொற்றுநோயை எதிர்த்து போராடவும் உதவுவதற்காக 14 பேர் கொண்ட இந்திய இராணுவ குழு கடந்த மாதம் மாலைதீவுக்கு அனுப்பப்பட்டது.

அத்துடன், இந்த மாத ஆரம்பத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்தியா 15 பேர் கொண்ட இராணுவக் குழுவை குவைத்துக்கு அனுப்பியது.

இந்நிலையிலேயே, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து நட்பு நாடுகளுக்கும் உதவி வழங்குவதற்கான இந்தியாவின் கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான அணிகள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!