பிறந்த குழந்தையை கூட ஒருமுறை கூடப் பார்க்காது கொரானாவால் பரிதாபமாகப் பலியான இளம் தாய்!!

பிரித்தானியாவில் தமது முதல் குழந்தை பிறந்த அடுத்த நாள், இளம் தாயார் ஒருவர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.

பிரித்தானியாவில் 29 வயதான இளம் தாயார் ஒருவர் தமது முதல் குழந்தை பிறந்த அடுத்த நாளே, கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.பர்மிங்காம் ஹார்ட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஃபோசியா ஹனிஃப் என்பவரே தமது குழந்தையை கூட ஒருமுறை பார்க்காமல் மரணமடைந்தவர்.

மட்டுமின்றி ஃபோசியாவின் 29 ஆம் பிறந்தநாளில் அவர் மரணமடைந்துள்ளதும் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு தமது முதல் குழந்தையை கருவிலேயே இழந்த நிலையில், தற்போது தமது இரண்டாவது குழந்தைக்காக அவர் மிகுந்த கவனத்துடன் மருத்துவ சோதனைகளை நிறைவேற்றி வந்துள்ளார்.

அவ்வாறாக ஒருமுறை மருத்துவமனைக்கு சென்றபோது, அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டது. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, இரண்டு நாட்கள் அவர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அதன் அடுத்த நாள், பெரிய பாதிப்பு இல்லை என்றும், குடியிருப்புக்கு திரும்பலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். குடியிருப்புக்கு திரும்பிய நான்காவது நாள், நிறைமாத கர்ப்பிணியான ஃபோசியாவின் நிலை மோசமடைந்ததுடன் அவர் மூச்சுவிடவும் சிரமப்பட்டுள்ளார். அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு என அனைத்தும் சாதாரணமாக இருந்துள்ளது, இருப்பினும் ஃபோசியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனைக்கு சென்ற இரண்டாவது நாள் ஃபோசியா ஆண் குழந்தைக்கு தாயாரானார். ஆனால் அவர் கண் விழித்து குழந்தையை பார்க்கும் முன்னரே, சிறப்பு வார்டுக்கு மாற்றியுள்ளனர். ஆனால் தொடர்ந்து அவரது நிலை மோசமடையவே, ஃபோசியாவை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர். தொடர்ந்து செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனிடையே, அவரது நிலை மிகவும் மோசமடையவும், ஒருகட்டத்தில் அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

இன்னும் பிழைப்பது கடினம் என உறுதி செய்த மருத்துவர்கள், ஃபோசியாவின் செயற்கை சுவாசத்தை அப்புறப்படுத்த அனுமதி கோரியுள்ளனர்.ஃபோசியாவின் 29-வது பிறந்தநாளன்று ஏப்ரல் 8 ஆம் திகதி அவரது செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு அவர் இறந்ததாக அறிவித்துள்ளனர். இதனிடையே ஃபோசியாவின் குழந்தைக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!