கொரோனா தொற்று: பிரித்தானியாவில் புதுவித அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் குழந்தைகள்!

பிரித்தானியாவில் கொரோனா தொடர்புடைய புதுவித அறிகுறியுடன் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதாக என்.ஹெச்.எஸ் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த எச்சரிக்கை கடிதத்தில், கொரோனாவுடன் தொடர்புடைய அறிகுறி ஒன்று (COVID-19 related inflammatory syndrome) பிரித்தானிய குழந்தைகளிடம் அதிகரித்துவருகிறது. கடந்த மூன்று வாரங்களாக இத்தகைய அறிகுறிகளுடன் லண்டன் மற்றும் பிரித்தானியாவின் பிற பகுதிகளில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படும் அனைத்து வயதினரான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

பொதுவாக, குழந்தைகள் கொரோனாவால் பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை என்ற கருத்து நிலவிவருகிறது. உலகம் முழுவதிலுமே மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சிறுவர்களே உயிரிழந்திருக்கும் நிலையில், இந்த புதிய அறிகுறியுடன் சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் இந்த மர்ம அறிகுறிகளை toxic shock syndrome மற்றும் Kawasaki என்னும் நோய்களுடன் ஒப்பிடுகின்றனர். அந்த நோய்களிலும் கொரோனாவின் அறிகுறிகளில் சிலவற்றைப்போல, உடல் உள்ளுறுப்புகள் வீக்கம், காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதே நேரத்தில், கொரோனா பரிசோதனை செய்யும்போது அவர்களில் சிலருக்கு கொரோனா இல்லை என பரிசோதனை முடிவுகள் வருவதால் மேலும் குழப்பமான சூழ்நிலையே நிலவுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!