கட்டுக்குள் வராத கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு உடனடியாக ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என கண்டுபிடிக்கப்படுகிறது. இதற்கிடையே வெளிமாநிலத்தில் தொழில் விஷயமாக புலம் பெயர்ந்தவர்கள் மாநில அரசுகளின் அனுமதியுடன் சொந்த ஊருக்கு திரும்பலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதனால் வெளிமாநிலங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கிவிட்டனர்.

அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. பாதிப்பு இல்லை என தெரியவந்தாலும், அவர்கள் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று 40 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 2,411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த எண்ணிக்கை நேற்று அதை விஞ்சியது.

அதன்படி 24 மணி நேரத்துக்குள் 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40,263 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பால் அதிகபட்சமாக புதிதாக 83 பேர் உயிரிழந்ததால் பலியானவர்கள் எண்ணிக்கையும் 1,223-ல் இருந்து 1,306 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் இதுவரை 10,887 பேர் குணமடைந்துள்ளனர். 28,070 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் மராட்டிய மாநிலம்தான் கொரோனாவின் கிடுக்கிப்பிடியில் சிக்கி உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,296 ஆக உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் அங்கு 521 பேரை உயிரிழக்கவும் செய்துவிட்டது. குஜராத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெல்லியில் 4,122 பேரும், தமிழகத்தில் 3,023 பேரும், ராஜஸ்தானில் 2,832 பேரும், மத்தியபிரதேசத்தில் 2,788 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,579 பேரும், ஆந்திராவில் 1,583 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இதற்கிடையே பஞ்சாபில் புதிதாக 330 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,102 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் 10-வதாக பஞ்சாப் இணைந்துள்ளது. தெலுங்கானாவில் இந்த பாதிப்பு 1,061 ஆக உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!