மதுபான கடைகள் திறப்பு: தவிடுபொடியான ‘சமூக இடைவெளி’!

கொரோனா தொற்றை தடுக்க வேண்டும் என்றால் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசும், மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன. இதனால்தான் இந்தியாவில் 54 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள், 19 நாட்கள், 14 நாட்கள் என மூன்று முறை உத்தரவு பிறப்பிக்கபட்டது. 2-வது முறையாக போடப்பட்ட உத்தரவு நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் இன்று முதல் ஹாட்ஸ்பாட்ஸ் இடத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தை தவிர மற்ற இடங்களில் கடைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் திறக்க மத்திய அரசு நிபந்தனையுடன் அனுமதி அளித்தது.

பெரும்பாலான மாநில அரசுகள் மதுக்கடைகளை திறக்க மிக ஆர்வம் காட்டின. இன்று காலையில் கடைகள் திறந்ததும் நூற்றுக்கணக்கானோர் மது வாங்க திரண்டனர். இதனால் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு வரிசையாக நின்றனர். அவர்கள் சமூக இடைவெளி என்றால் என்ன? என்று கேட்கும் அளவிற்கு ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நின்றிருந்தனர். அதில் பெரும்பாலானோர் முகக்கவசம் கூட அணியவில்லை.

குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மதுக்கடை முன் அலைஅலையாய் திரண்டனர். இந்தியாவின் தலைநகரான டெல்லி முழுவதும் ஹெட்ஸ்பாட்ஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கும் கூட்டம்கூட்டமாக நின்றது வேதனை அளிப்பதாக இருந்தது. கடந்த ஒரு வாரமாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் இந்த கூட்டம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!