ஈக்வடாரில் தெருவோரங்களில் கண்டெடுக்கப்படும் சடலங்கள்! தொடரும் கொரோனா அவலங்கள்

லத்தீன் அமெரிக்க நாடான ஈக்வடாரில் கொரோனாவால் மரணமடைந்து தெருவோரங்களில் காணப்படும் சடலங்களை மீட்கும் நடவடிக்கைகளில் மருத்துவ ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தலைநகர் குயிட்டோவிலேயே தெருவில் ஆதரவின்றி காணப்படும் சடலங்களை மருத்துவ ஊழியர்கள் மீட்டு, அப்புறப்படுத்தி வருகின்றனர்.

ஈக்வடார் நாட்டில் இதுவரை 31,000 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். இதில் சுமார் 1,569 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் உள்ளது. இங்குள்ள ஜனாதிபதியின் மெத்தனத்தால் இதுவரை 7,921 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என பரவலாக பேசப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனா பாதிப்பு அதன் உச்சத்தை எட்டும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஈக்வடார், கொலம்பியா மற்றும் டொமினிகன் குடியரசு உட்பட பல நாடுகள் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் தங்கள் ஊரடங்கு நடவடிக்கைகளை நீட்டித்துள்ளன.

இதனிடையே ஈக்வடாரில் உள்ள பழங்குடி இன மக்கள் தங்கள் இனமே கொரோனாவால் மொத்தமாக அழிந்து போகும் நிலை ஏற்படாலாம் என அஞ்சி, அமேசான் மழைக்காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

சமீபத்தில் ஈக்வடாரில் சடலங்களை புதைக்க போதிய இடவசதி இல்லை என்ற தகவல் வெளியானது.

தற்போது கொரோனா பாதிப்பால் மக்கள் தெருவோரங்களில் சுருண்டு விழுந்து மரணமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!