கோவிட்-19: தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது. நேற்று வேளச்சேரி, கண்ணகி நகர், புளியந்தோப்பு, சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 42 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் சென்னையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடுகிற முதல் நிலை பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் தற்போது பொதுமக்கள், வர்த்தகம் மற்றும் பஸ் சங்கங்களின் ஒத்துழைப்பால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர். இந்தநிலையில் தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஒரே நாளில் 509 பேர்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 509 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 227 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 984 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2 ஆயிரத்து 176 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

3 ஆண்கள் உயிரிழப்பு

சென்னை மருத்துவமனைகளில் ஒரே நாளில் 3 ஆண்கள் கொரோனா வைரசால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சென்னையை சேர்ந்த 48 வயது ஆண் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் 41 வயது ஆண் நீரிழிவு நோயால் கடந்த 6-ந்தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவர் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையை சேர்ந்த 43 வயது ஆண், நீரிழிவு நோயால் தனியார் மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1 வயது பெண் குழந்தை

தமிழகத்தில் நேற்று 16 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் 1 வயது பெண் குழந்தை உட்பட 36 குழந்தைகள் மற்றும் 344 பேரும், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தலா 25 பேரும், திருவண்ணாமலையில் 8 வயது பெண் குழந்தை உட்பட 23 பேரும், கடலூரில் 17 பேரும், விழுப்புரத்தில் 7 பேரும், தேனி, நெல்லை மற்றும் தமிழக விமான நிலைய முகாம்களில் தலா 5 பேரும், காஞ்சீபுரம், அரியலூரில் தலா 4 பேரும், கரூர், மதுரை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், தூத்துக்குடி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஒருவரும் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 42 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 34 முதியவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 42 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், திருவள்ளூரில் 3 பேரும், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இதுவரை கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 79 ஆயிரத்து 467 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!