இராணுவ அதிகாரியை தோளில் சுமந்தது அடிமைப்புத்தியைக் காட்டுகிறது! – சிவாஜிலிங்கம் காட்டம்

விஸ்வமடு பகுதியில் இராணுவ அதிகாரி கேணல் பந்து இரத்னபிரியவிற்கு கண்ணீர் மல்க முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பொது மக்கள் பிரியாவிடை கொடுத்திருப்பது எமது மக்களின் சபலபுத்தியைத் தான் காட்டுகின்றது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

‘ நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டு இராணுவ அதிகாரியை தோளில் சுமந்து கொண்டு செல்வது தமிழ் மக்களின் அடிமைப்புத்தியைத்தான் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றது. இவர் நல்லவர், அவர் நல்லவர் என சாதாரண கிராம மக்கள் இதை செய்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் முன்னாள் போராளிகள் இதனை செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதுவும் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என வெடித்துச் சிதறி வீரச்சாவை தழுவிக்கொண்ட ஐம்பதாயிரம் மாவீரர்களுக்கு செய்கின்ற துரோகமாகத்தான் நான் இதை கருதுகின்றேன்.

அவர் ஒரு அதிகாரி, நல்லவராக அல்லது நேர்மையாக நடந்து கொள்ளலாம், ஆனால் நீங்கள் இவ்வாறு செய்வதென்பது ஒட்டுமொத்த இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்துகின்ற பாரிய பிரச்சினைக்கு இட்டுச்செல்லும். ஒரு தனி மனிதன் நல்லவராக இருக்கலாம், தளபதியாக இருக்கலாம், பிராந்திய தளபதியாக இருக்கலாம் அது வேறு விடயம். ஆனால் அதற்காக தமிழ் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு, விழா எடுத்து, தோளில் சுமந்துகொண்டு செல்வது என்பது எங்களுடைய அடிமை புத்தியைத்தான் காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!