கோவிட்-19: தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. சென்னையில் முக்கிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறவர்கள் பலர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகளில் சென்னையில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிக அளவில் சென்னையில் காணப்படுகிறது. மேலும் நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 750 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் முதன்மை நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் அதே வேளையில் பல புதிய கட்டுப்படுத்துதல் பகுதிகள் அமைக்கப்பட்டு அங்கு கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சமூக தொற்று ஆரம்பித்து விட்டதோ என்ற அச்சம் சென்னை மக்கள் இடையே நிலவுகிறது. மேலும் தமிழகத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 176 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 556 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 81 பேரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் வந்தவர்களில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக் கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 634 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் திருவள்ளூரை சேர்ந்த 40 வயது மற்றும் 63 வயது ஆண்கள் இருவரும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதைப்போல் சென்னையை சேர்ந்த 44 வயது மற்றும் 45 வயது பெண்கள் இருவரும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் சென்னையில் 482 பேரும், செங்கல்பட்டில் 28 பேரும், திருவள்ளூரில் 18 பேரும், கள்ளக்குறிச்சியில் 17 பேரும், கரூரில் 16 பேரும், நெல்லையில் 15 பேரும், தூத்துக்குடி மற்றும் மதுரையில் தலா 13 பேரும், சேலத்தில் 9 பேரும், அரியலூர் மற்றும் காஞ்சீபுரத்தில் தலா 5 பேரும், விருதுநகர் மற்றும் சிவகங்கையில் தலா 4 பேரும், தென்காசி மற்றும் திருவண்ணாமலையில் தலா 3 பேரும், டெல்லியில் இருந்து ரெயில் மூலம் வந்தவர்களில் 2 பேரும், கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 42 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 54 முதியவர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 81 பேருக்கு தொண்டை சளி மாற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரத்து 720 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 19 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 477 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. மேலும் 15 ஆயிரத்து 99 மாதிரிகள் 2-வது முறை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!