நினைவேந்தலை புறக்கணித்து வெளியேறிய பிரதேச சபை உறுப்பினர்கள்!

வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை அமர்வில், நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டபோது, குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்று தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில், நடைபெற்றது. இதன்போது, முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின், பிரமுகர்களான ப.சத்தியலிங்கம், செ.மயூரன் ஆகியோர் வந்திருந்தனர். இதனால் சபை அமர்வில் குழப்பநிலை ஏற்பட்டதுடன், ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனால், சபை அமர்வு, வெள்ளிக்கிழமை வரை சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அஞ்சலி நிகழ்வுக்கு கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர் என்றும், ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால், அதனை புறக்கணித்து, சபையில் இருந்து வெளியேறியதாக வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அஞ்சலி நிகழ்வை நடத்த முற்பட்ட போது சில உறுப்பினர்கள் தடங்கல்களை ஏற்படுத்தினர் என்றும், இதனால் சபையிலிருந்து கீழே வந்து அஞ்சலியை செலுத்தப்பட்டதாகவும், குறிப்பிட்ட பிரதேச சபையின் தவிசாளர், அதற்குப் பின்னரும், குழப்பங்களை ஏற்படுத்த முனைந்ததால், சபையை ஒத்திவைத்ததாகவும், கூறினார்.

இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக சத்தியலிங்கம், மயூரன் ஆகியோர் கூறியதை அடுத்து, நேற்றுக் காலை, அனைத்து கட்சியினருக்கும் தொலைபேசி மூலமாக தான் அழைப்பு விடுத்திருந்ததாகவும், தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!