சீனாவில் 2 வயதில் காணாமல் போன மகன்: 30 வருடங்கள் கழித்து தாயுடன் சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

சீனாவில் 2 வயதில் தொலைந்துபோன தமது மகனை தாயார் ஒருவர் 30 ஆண்டுகளாக இடைவிடாது தேடி இறுதியில் கண்டடைந்துள்ளார். இந்த 30 ஆண்டுகளில் Li Jingzhi என்ற இந்த தாயாரின் தொண்டு நிறுவனம் சார்பில் மேலும் 29 பேர் தங்கள் பெற்றோருடன் இணைந்துள்ளனர். சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் சியான் பகுதியில் கணவர் மற்றும் மகனுடன் குடியிருந்து வந்துள்ளார் Li Jingzhi. கடந்த 1988 அக்டோபர் 17 ஆம் திகதி இரண்டு வயதான Mao Yin பாடசாலையில் இருந்து திரும்பும் வழியில் தமது தந்தையின் கவனக் குறைவால் தொலைந்துபோயுள்ளார்.

ஒரே ஒரு மகனைத் தொலைத்த நிலையில், Li Jingzhi தமது வேலையை துறந்து, மாயமான மகனைத் தேட முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் 10 மாகாணங்களில் சுமார் 100,000 துண்டுப் பிரசுரங்களை தமது கைப்பட விநியோகித்துள்ளார். மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் என கடந்த 30 ஆண்டுகளாக ஓய்வின்றி தேடியுள்ளார்.

இந்த நிலையில் சியான் நகரில் இருந்து சுமார் 620 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் வசிக்கும் ஒரு 34 வயது நபர் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் வசித்துவரும் ஒரு குடும்பத்தில் தத்துப் பிள்ளையாக வளர்ந்துவரும் அந்த நபரின் டி.என்.ஏ சோதனை முடிவுகள் பொலிசாருக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

2 வயதான சிறுவன் மாவோ யின் கடத்தப்பட்டு, பிள்ளைகள் இல்லாத தம்பதிக்கு தற்போதைய மதிப்பில் சுமார் 690 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டுள்ளார்,. டி.என்.ஏ சோதனையில் மாவோ யின் விவகாரம் உறுதியான நிலையில், சீனத்து அன்னையர் தினமான மே 10 ஆம் திகதி, இந்த தகவலை Li Jingzhi இடம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது மாவோ யின் தமது உண்மையான பெற்றோருடன் இணைந்துள்ளது மட்டுமின்றி, இனி தமது தாயாருடன் வாழவே முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவை பொறுத்தமட்டில் ஆண்டுக்கு சராசரி 112,853 சிறார்கள் மாயமாவதாக உத்தியோகப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!