என்னைத் தனிமைப்படுத்த முயற்சி! – ரட்ணஜீவன் ஹூல்

தம்மை, தேர்தல் ஆணைக்குழுவுக்குச் செல்ல விடாமல் தடுக்கும் நோக்கிலேயே தன்னை தனிமைப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய மகளுடன், ரட்ணஜீவன் ஹூல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்றதாக, சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

“எனது மகள் கடந்த 4ஆம் திகதி, இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு வருகைத் தந்தார். 18ஆம் திகதி வரை, நீர்கொழும்பு- ஜெட்விங் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் நிறைவு செய்யப்பட்டது. தனிமைப்படுத்தலை நிறைவு செய்தமைக்கான சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று தேர்தல் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் இருந்ததால், யாழ்ப்பாணத்துக்குச் செல்ல முடியாது என்பதால், மகளையும் அழைத்துக் கொண்டு, நேற்று முன்தினம் ஆணைக்குழு அலுவலகத்துக்குச் சென்ற போது, எனது மகள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்யாமல் சென்றிருப்பதாக தகவல் பரப்பப்பட்டது.

இந்தநிலையில், ஆணைக்குழுவின் தவிசாளர் என்னையும் எனது சாரதியையும் தனிமைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்ததையடுத்து, அன்றே யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி விட்டேன்.

அலுவலக நடவடிக்கைக்காக, தகுந்த ஆவணங்களுடன், தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சென்றபோது, அங்கிருந்தவர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அங்கிருந்து வெளியேறினேன். ஒருபோதும் இல்லாத வகையில் எதிர்பார்க்காத பல இடங்களில் எனது வாகனம் இடைமறிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

எனது காரின் வாகன இலக்கத்துடன் எல்லா இடங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பான எழுத்துமூல ஆவணத்தைப் காண்பித்தே வாகனத்தை மறித்து பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதுவரை இவ்வாறு வழியில் சோதனைக்கு உட்படுப்படுத்தப்பட்டதில்லை.

நேற்று அதிகாலை யாழ்ப்பாணத்திலுள்ள எனது வீட்டுக்கு வந்த பொலிஸார், என்னை தனிமைப்படுத்த முயற்சித்தனர். எனினும் சுகாதார வைத்திய அதிகாரி என்னை தனிமைப்படுத்த அவசியமில்லை என்று கூறிவிட்டார்” என்றும் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூலில் மகள், தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சென்றது சட்டத்துக்கு எதிரானது அல்ல என்றும், ஆனால், அது நெறிமுறையற்ற செயல் என்றும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஹூலின் மகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, அதற்குரிய சான்றிதழ்களைப் பெற்றிருந்தாலும், மேலும் 14 நாட்கள், சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!