உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் நாடாளுமன்றத்தைக் கூட்டமாட்டேன்! – ஜனாதிபதி சூளுரை

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட, நாடாளுமன்றை தாம் மீளக் கூட்டப் போவதில்லை என்று கோத்தாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரத்தை தாம் இதுவரை பயன்படுத்தவில்லை என்றும், தேவைப்படின் அதனை பயன்படுத்த தயாராகவே இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின்படியே நான் செயற்பட்டுள்ளேன்.அரசியல் காரணங்களை வைத்து எனக்கு அழுத்தங்களை வழங்க எவரும் முயற்சிக்கக்கூடாது. நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு நீதிமன்றம் சொன்னாலும் நான் மீண்டும் ஒத்திவைப்பேன். அல்லது கூட்டும் வர்த்தமானியை விடுத்து மீண்டும் கலைப்பேன். இந்த நாடாளுமன்றின் ஆயுட்காலம் முடியும் வரைக்கும் வேண்டுமானால் அப்படிச் செய்யலாம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் அரசியலமைப்பின்படி என்ன செய்யமுடியுமோ அதனை நான் செய்வேன். நாட்டின் தற்போதைய நிலைமையில் யாரும் தேவையற்ற அரசியலை செய்யக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!