அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் திடீர் மரணம்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் நேற்றிரவு காலமானார். நேற்று மாலை பத்தரமுல்லையில் உள்ள வீட்டில் இருந்த போ து மயங்கி விழுந்த அவர், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, இரவு 9.00 மணியளவில் மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1964 மே 29 ஆம் திகதி பிறந்த அவர் 56 வயதைப் பூர்த்தி செய்வதற்கு 3 நாட்கள் இருந்த நிலையில் காலமானார். கடந்த சுமார் 20 வருடகாலமாக பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்த அவர், தற்போதைய அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி வகித்தார்.

இன்று காலை தனது அமைச்சுக்குச் சென்ற அவர் பின்னர் இந்தியாவின் புதிய உயர் ஸ்தானிகரை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

அதன் பின்னர் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவையும் அவர் சந்தித்தார். பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டிய நிகழ்வுகள் பற்றிக் கலந்துரையாடுவதற்காகப் பிரதமரைச் சந்தித்த தொண்டமான், அங்கு சகஜமாகச் சிரித்துப் பேசியதாகவும் அறியமுடிகிறது.

அதன் பின்னர் பத்தரமுல்லைப் பகுதியிலுள்ள தன்னுடைய வீட்டுக்குச் சென்றபோதே, நெஞ்சைப் பிடித்தவாறு காலிடறி விழுந்துள்ளார் என்றும் இதனையடுத்து உடனடியாக தலங்கம வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆறுமுகம் தொண்டமான் திடீரென உயிரிழந்ததையடுத்து தலங்கம வைத்தியசாலைக்கு நேற்றிரவு பிரதமர் மகிந்த ராஜபக்ச, அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்.

நேற்றிரவு மரணமான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் சடலம், நேற்றிரவு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக வைத்தியசாலையிலிருந்து எடுத்து செல்லப்பட்டது.

அவரது பூதவுடல் தற்போது ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியை விபரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!