ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் தொடரும்!

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் முடிவு எப்படி இருந்தாலும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் தொடரும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்த பின்னர், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இந்த வழக்கில் நாம் இரண்டு பிரதான கோரிக்கைகளை முன்வைத்தோம். ஒன்று – ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தும் அறிவிப்பு தவறானது என்பது. அடுத்தது – நாடாளுமன்றம் கலைத்து மூன்று மாதங்களாகியும் புதிய நாடாளுமன்றம் கூட முடியாத காரணத்தினால் நாடாளுமன்றக் கலைப்புப் பிரகடனம் செல்லுபடியற்றது என்பது.

முதலாவது விடயத்துக்கு வழக்கு விசாரணை ஆரம்பித்து முதல் நாளிலேயே முடிவு எட்டி விட்டது. ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

இரண்டாவது விடயம் தொடர்பில் வழக்கைத் தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத வகையில் நீதிமன்றம் முடிவு செய்து அறிவித்துள்ளது. எனினும் ஜனநாயகத்துக்கான எமது போராட்டம் தொடரும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!