நடுரோட்டில் குழந்தையை பெற்றெடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்!

உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் பரிசோதனைகள் மூலம் கொரோனா யாருக்கு உள்ளது? என்பதை கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவது, முறையான சிகிச்சை அளிப்பது போன்றவற்றில் மத்திய-மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நடுரோட்டில் குழந்தை பெற்ற மனநலம் பாதித்த பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை நடத்தப்படாத சம்பவம் விருதுநகரில் நடைபெற்றுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக 35 வயது இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையில் திரிந்து வந்தார். அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவர ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சாந்தி ஆம்புலன்சு மூலம் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு சிகிச்சையில் இருந்த பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாருக்கும் தெரியாமல் வெளியேறி விட்டார். இந்த நிலையில் விருதுநகர் கால்நடை ஆஸ்பத்திரி சாலையில் நடந்து சென்ற அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. நடுரோட்டில் அவருக்கு பெண் குழந்தையும் பிறந்தது. அக்கம் பக்கத்தினர் குழந்தையுடன் மனநலம் பாதித்த பெண்ணை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைத்தனர்.

அங்கு பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பரிசோதனை எதுவும் நடத்தப்படவில்லை. மனநலம் பாதித்த பெண் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். எனவே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என பொதுமக்களும், ஆஸ்பத்திரியில் வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்களும் சந்தேகம் அடைந்தனர். மேலும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு மனநலம் பாதித்த பெண் மூலம் கொரோனா தொற்று ஏற்படுவதற்குள் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!