நாட்டை உலுக்கிய கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரம்: வெளியான புதிய தகவல்!

இந்திய மாநிலம் கேரளாவில் கர்ப்பிணி யானை மரணமடைந்த விவகாரத்தில் தற்போது புதுத் தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் மலப்புறம் மாவட்ட வனப்பகுதியில் பசியுடன் அலைந்த கர்ப்பிணி யானைக்கு அப்பகுதி மக்கள் உணவளித்துள்ளனர். இதில் சிலர் யானைக்கு கொடுத்த அன்னாசிப் பழத்தில் வெடிமருந்தை வைத்துக் கொடுத்ததாகவும், அதனால் யானை கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் இந்திய வனத்துறை அதிகாரி ஏபி க்யூம் முற்றிலும் புதிய தகவலை தனியார் செய்தி ஊடகம் ஒன்றிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், யானைக்கு யாரும் வெடிமருந்து நிரப்பிய அன்னாசிப் பழங்களை தின்னக் கொடுக்கவில்லை என்றே நினைக்கிறேன். காட்டுப்பன்றிகளிடம் இருந்து அன்னாசிப்பழ தோட்டத்தை காக்க வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து நிரப்பிய அன்னாசிப் பழத்தை பசிக்காக யானை தின்றிருக்கலாம். அப்பகுதி மக்கள் விலங்குகளிடம் இருந்து பயிர்களையும் தங்களையும் பாதுகாக்க இதுபோன்ற விடயங்களை வழக்கமாக செய்து வருகின்றனர் என்றார்.

மேலும், காட்டுப் பன்றிகளிடம் இருந்து தங்கள் தோட்டங்களை காக்க விவசாயிகள் வலைகளையும் வைத்துள்ளனர். இதில் காட்டுப் பன்றிகள் மட்டுமின்றி பிற விலங்குகளும் சிக்குவதுண்டு. இறந்த யானை பாலக்காட்டில் உள்ள சைலண்ட் வேலி தேசிய பூங்காவில் இருந்து வந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இதனிடையே, யானைக்கு அன்னாசிப்பழம் கொடுத்தவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும், இருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கேரள வனத்துறை தெரிவித்துள்ளது. வனத்துறை இந்த வழக்கை விசாரிப்பதுடன், பொலிசாருக்கும் தகவல் தெரியப்படுத்தி, அவர்களும் வழக்குப் பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

கரிப்பிணி யானை இறந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நடவடிக்கையும் கடுமையாக இருக்கும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!