சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை குற்றவாளி!

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை வழக்கு குற்றவாளிகள் நால்வரில் ஒருவர் பிணை தொகையை செலுத்தியதால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் நடவடிக்கையின்போது பரிதாபமாக மரணமடைந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவர் 37 வயதான தாமஸ் லேன் என்பவர். இவருக்கு பிணை தொகையாக நீதிமன்றம் 750,000 டொலர் என அறிவித்தது. இதனையடுத்து குறித்த தொகையை செலுத்திய முன்னாள் காவலர் தாமஸ் லேன் புதனன்று சுமார் 4.10 மணியளவில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மேலும், நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாக உறுதி அளித்துள்ளதாகவும், தற்போது அவர் தமது மனைவியுடன் குடியிருப்பார் எனவும், ஆனால் பாதுகாப்பு காரணங்களால் எந்த பகுதியில் அவர்கள் வசிக்க உள்ளனர் என்பதை தெரிவிக்க முடியாது என அவரது வழக்கறிஞர் தரப்பு தெரிவித்துள்ளது.

லேன் கடந்த ஒரு வாரமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது அடுத்த நீதிமன்ற ஆஜரானது ஜூன் 29 ஆம் திகதி நடைபெற உள்ளது, அங்கு தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்யக் கோரி ஒரு பிரேரணையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறுகிறார்.

தங்களது பிரேரணை கண்டிப்பாக நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எஞ்சிய மூவரும் இதுவரை பிணையில் வெளிவரவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!