பாகிஸ்தானில் 8 வயது சிறுமியை அடித்து கொன்ற பெற்றோர்: திகைக்கவைக்கும் காரணம்!

பாகிஸ்தானில் எட்டு வயது சிறுமி ஒருவர் தாம் வேலை செய்து கொண்டிருந்த ஒரு தம்பதியின் செல்லப் பறவைகளை தவறுதலாக விடுவித்ததாகக் கூறி அடித்து கொல்லப்பட்ட விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் ஹசன் சித்திகி என்பவரது குடியிருப்பில் ஏழ்மை காரணமாக பணி செய்து வந்துள்ளார் 8 வயது சிறுமியான சஹ்ரா ஷா. இந்த நிலையில் ஜூன் 1 ஆம் திகதி குற்றுயிரான நிலையில் சிறுமி சஹ்ரா ஷாவை ராவல்பிண்டி மருத்துவமனையில் அனுமதித்த ஹசன் சித்திகி, விபத்து என கூறிவிட்டு அங்கிருந்து மாயமாகியுள்ளார்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவரது உடம்பு முழுவதும் சித்திரவதை செய்யப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டுள்ளது. மட்டுமின்றி, அதிக அளவு ரத்தம் வெளியேறிய நிலையில், ஆபத்தான கட்டத்தில் சிறுமியை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஹசன் சித்திகி மற்றும் அவரது மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், சிறுமி சஹ்ரா ஷா, அந்த தம்பதியின் விலை உயர்ந்த செல்லப் பறவை ஒன்றை கூண்டில் இருந்து வெளியேற்றியதாக தெரியவந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சித்திகி மற்றும் அவரது மனைவி சஹ்ராவை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த சிறுமி சஹ்ரா ஷா சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் பாகிஸ்தானில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 15 வயதுக்கு உட்பட்ட எவரையும் பணியாளாக பயன்படுத்துவது சட்ட விரோதம் என கூறப்பட்டு வந்தாலும், பாகிஸ்தானில் அந்த சட்டம் தொடர்ந்து பல பகுதிகளில் மீறப்பட்டு வருகிறது. சிறுமி சஹ்ரா ஷாவை பாடசாலைக்கு அனுப்ப சித்திகி உறுதி அளித்த நிலையிலேயே சிறுமியின் பெற்றோர் தங்கள் ஏழ்மை நிலை கருதி பணிப்பெண்ணாக அனுப்பி வைத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!