ஞானசார தேரருக்கான தண்டனை மனித உரிமைக்காக போராடுவோருக்கு கிடைத்த வெற்றி! – சர்வதேச மன்னிப்புச் சபை

காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதற்காக , ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை சர்வதேச மன்னிப்புச் சபை வரவேற்றுள்ளது.

வழங்கப்பட்ட தண்டனையானது, இலங்கையில் மனித உரிமையை பாதுகாப்பதற்காக போராடும் அனைவருக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிரதி பணிப்பாளர் ஒமர் வராய்ச் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2010 ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா, கடுமையான அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்த நிலையில், தனக்கான நீதியை பெற்றுக்கொள்ள கடுமையான போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் குறிப்பிட்ட வழக்கு விசாரணையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை மிரட்டிய குற்றத்திற்காக, ஞானசார தேரருக்கு 6 மாதங்களில் அனுபவித்து முடிக்கும் வகையில் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!