வலி.வடக்கில் பொதுமக்களின் வீடுகளை அழித்து தென்னங்கன்றுகளை நாட்டும் படையினர்!

வலிகாமம் வடக்கில் கட்டுவன் – மயிலிட்டி வீதியின் கிழக்குப் பகுதியில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளில் எஞ்சியிருக்கும் வீடுகள், மதில்களை புல்டோசர் மூலம் இடித்தழிக்கும் நடவடிக்கைகள் கடந்த ஒரு வார காலமாக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பற்றைகள் வெட்டி அகற்றப்பட்டு, வீடுகள் இடித்தழிக்கப்பட்டு வெட்டவெளியான நிலத்தைப் பண்படுத்தி, தென்னம்பிள்ளைகள் நடும் நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். இராணுவத்தின் இந்த நடவடிக்கை தமது காணிகள் இனி ஒருபோதும் விடுவிக்கப்பட மாட்டாதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த 28ஆவது ஆண்டு நிறைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில் இராணுவத்தினர் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி, மகிந்த ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்த ஹத்துருசிங்கவின் காலத்தில், வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. 2014ஆம் ஆண்டளவில் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டிருந்தது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் மக்கள் காணிகள் வலி.வடக்கில் படிப்படியாக கையளிக்கப்பட்டது. அண்மையில் 683 ஏக்கர் நிலப்பரப்பு வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு விடுவிக்கப்பட்ட பிரதேசத்தின் எல்லையில் இராணுவத்தினர் புதியபாதுகாப்பு வேலி அமைத்தனர். புதிதாக அமைக்கப்பட்ட வேலியினால் எல்லைப்படுத்தப்பட்ட பிரதேசத்திலுள்ள வீடுகளே இராணுவத்தினரால் தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!