தயாராக இருக்கும் கொரோனா தடுப்பூசி: விரைவில் பொதுமக்களிடம் பரிசோதனை!

ஆகஸ்டு 15, ஆங்கிலேயரிடம் இருந்து மட்டுமல்ல, கொலைகார கொரோனா வைரசிடமிருதும் விடுதலை பெறுகிற ஒரு நாளாக மாறப்போகிறது. இந்த நம்பிக்கையை நமக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தந்துள்ளது. உலக நாடுகளில், அதுவும் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா, பிரேசில் போன்ற வளர்ந்த நாடுகளைக்காட்டிலும் இந்தியாதான் தடுப்பூசி துறையில் எப்போதும் முன்னிலை வகிக்கிறது என்பது கொரோனாவிலும் நிரூபணம் ஆகப்போகிறது. அந்த வகையில் நமது நாட்டிலேயே நம்பகமான ஒரு தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.

‘கோவேக்சின்’ என்று அழைக்கப்படுகிற இந்த தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன், புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கூட்டாக உருவாக்கி உள்ளன. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள முதல் தடுப்பூசி என்ற சிறப்பை இந்த தடுப்பூசி பெறுகிறது. இந்த தடுப்பூசியின் மற்றொரு சிறப்பு, முள்ளைக் கொண்டு முள்ளை எடுப்பது போல, கொரோனா வைரஸ் திரிபுவில் இருந்து கொரோனா வைரசை தடுக்க உருவாக்கப்பட்டிருப்பது ஆகும்.

இந்த தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்திய சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. இந்த சோதனையில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி பாதுகாப்பானது, நம்பகமானது, சிறந்த நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கும் வல்லமை கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. அடுத்த கட்டமாக இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிப்பதற்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி (டிஜிஜிஐ) தனது அனுமதியை அளித்து விட்டார்.

அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிவேகமாக இறங்கி இருக்கிறது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிப்பதற்கான சோதனை தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த மருத்துவ நிறுவனங்கள் மற்றும் முதன்மை ஆய்வாளர்களை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் நபர்களை 7-ந் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) பதிவு செய்து, உறுதி செய்யுமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா கடிதம் எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறி இருப்பதாவது:- உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை அதிவிரைவாக மனிதர்களுக்கு செலுத்தி சோதித்துப் பார்க்க பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூட்டு சேர்ந்துள்ளது என்பதை உங்கள் கனிவான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம்.

கொரோனாவுக்காக இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் தடுப்பூசி இதுதான். இந்த தடுப்பூசி திட்டமானது, அரசின் உயர் முன்னுரிமை திட்டங்களில் ஒன்றாக, அரசின் உயர் மட்ட அளவில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனத்தால் பிரித்தெடுக்கப்பட்ட சார்ஸ் கோவ்-2 (கொரோனா வைரஸ்) திரிபுகளில் இருந்து இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் பாரத் பயோடெக் நிறுவனமும் இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்ப்பதிலும், உருவாக்கத்திலும் இணைந்து செயல்படுகின்றன. எல்லா மருத்துவ பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு, ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திரதினத்தின்போது பொதுமக்களின் பயன்பாட்டைத் தொடங்க எண்ணப்பட்டுள்ளது. இலக்கை சந்திப்பதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் அதிவேகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இருப்பினும் இதில் இறுதி முடிவு என்பது எல்லா பரிசோதனை தளங்களிலும் கிடைக்கிற ஒத்துழைப்பை பொறுத்தே அமையும்.

கொரோனா வைரஸ் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்ப்பதற்கு நீங்கள் (மருத்துவ நிறுவனங்கள்) பரிசோதனை தளமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறீர்கள். கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பொது சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டும், இந்த தடுப்பூசியை விரைவாக கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள அவசரத்தையொட்டியும், மனிதர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி பார்க்கும் இந்த பரிசோதனைக்கு தேவையான அனைத்து ஒப்புதல்களையும் நீங்கள் விரைவாக செய்து முடித்து, அதற்கான நபர்களை 7-ந் தேதிக்குள் பதிவு செய்து, உறுதிப்படுத்த கண்டிப்புடன் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

இதற்கு இணங்கி நடக்காவிட்டால், அது மிக தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும். எனவே இந்த திட்டத்தை அதிக முன்னுரிமையுடன் நடத்தவும் கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவை எந்த குறைபாடும் இன்றி சந்திக்கவும் அறிவுறுத்தப்படுகிறீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை தமிழ்நாட்டில் செலுத்தி பார்க்கும் இடமாக சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் ஆராய்ச்சி மையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆஸ்பத்திரியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிற ஆஸ்பத்திரிகள் வருமாறு:-

மன்னர் ஜார்ஜ் ஆஸ்பத்திரி, விசாகப்பட்டினம் (ஆந்திரா), சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், ரோட்டக் (அரியானா), எய்ம்ஸ் ஆஸ்பத்திரி, டெல்லி, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி, பாட்னா (பீகார்), ஜீவன் ரேகா ஆஸ்பத்திரி, பெலகாவி (கர்நாடகம்), கில்லுர்கர் பன்னோக்கு சிறப்பு ஆஸ்பத்திரி, நாக்பூர் (மராட்டியம்), ரானா ஆஸ்பத்திரி, கோரக்பூர் (உ.பி.), நிஜாம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ஐதராபாத் (தெலுங்கானா), டாக்டர் கங்காதர் சாகு, புவனேஸ்வரம் (ஒடிசா), பிரஹார் ஆஸ்பத்திரி, கான்பூர் (உ.பி.), டாக்டர் சாகா விவேக் ரெட்கார், கோவா. மேலே குறிப்பிட்ட ஆஸ்பத்திரிகளின் டீன்களுக்கும், டாக்டர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்தியாவில் அதிதீவிரமாக பரவிக்கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஆகஸ்டு 15-ந் தேதி முதல் தடுப்பூசி வந்துவிடும் என்ற நம்பிக்கை வலுப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் விலை என்ன என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த தடுப்பூசி ரூ.75 என்ற விலையில் விற்கப்படலாம் என்றும், ஏழைகளுக்கு இந்திய அரசே இலவசமாக செலுத்தும் என்றும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!