தாயின் முகத்தை பார்க்க முடியாமல் தவிக்கும் குழந்தைகள்: பிணவறை ஊழியர்களின் கவனக்குறைவால் நேர்ந்த சோகம்!

இறப்பு, எப்போதுமே யாராலும் மருந்து தடவ முடியாத காயத்தை பலரின் இதயத்தில் ஏற்படுத்தி விட்டு சென்று விடுகிறது. ஆனால் அஞ்சூம் என்ற ஒரு பெண்ணின் இறப்பு, அவரது உடலை கடைசி முறையாக பார்க்கிற வாய்ப்பை கூட அவரது சகோதரருக்கும், குழந்தைகளுக்கும் தராமல் போனதை யாரால் ஆற்ற முடியும் அல்லது தேற்ற முடியும் என்கிறீர்கள்? இதோ நெஞ்சை நொறுக்கும் அந்த வேதனையின் முகவரி- அஞ்சூம் என்பது அந்த முஸ்லிம் பெண்ணின் பெயர். வயது 35. கணவனை 7 மாதங்களுக்கு முன்னர் இழந்து விட்ட இந்த பெண்ணுக்கு 3 குழந்தைகள்.

இந்தப் பெண்ணுக்கு திடீரென மஞ்சட்காமாலை தாக்கியது. உத்தரபிரதேச மாநிலம், பரேலியை சேர்ந்த அவரை கடந்த 4-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டு போனார் அவரது சகோதரர், ஷெரீப்கான். அடுத்த 2 மணி நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது தெரிய வந்தது. உடனே அவர் கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டார். 6-ந் தேதி இரவில் சிகிச்சை பலனின்றி அஞ்சூம் இறந்து விட்டார். இதுகுறித்து அவரது சகோதரர் ஷெரீப் கானை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அடுத்த நாள் காலை 8 மணிக்கு அவர் குடும்பத்தினருடன் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார்.

சகோதரியின் உடலை சொந்த ஊரான பரேலிக்கு எடுத்துச்செல்ல முடியுமா என அவர், அங்கிருந்த டாக்டர்களிடம் விசாரித்தார். ஆனால் அவர்களோ அதற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். தவிரவும், அவர்களுக்கு 4 ‘செட்’ சுய பாதுகாப்பு கவச உடைகளை வழங்கிய டாக்டர்கள், மரணம் அடைந்த அஞ்சூமின் உடலை அடக்கம் செய்வதற்காக ஐ.டி.ஓ. மயானத்துக்கு சென்று முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினர்.

உடனே ஷெரீப் கானும், குடும்பத்தினரும் அந்த இடுகாட்டுக்கு சென்றனர். எல்லாம் முடிந்து, சவக்குழிக்குள் உடலை இறக்குவதற்கு முன்னதாக, சகோதரியின் முகத்தை கடைசி முறையாக பார்க்க வேண்டும் என்ற தவிப்பில், உடல் வைக்கப்பட்டிருந்த பையை திறந்தால், அதில் இருந்தது அஞ்சூமின் உடல் அல்ல. அந்த உடல் காசியாபாத் குசும்லதாவின் உடல் என்று அதில் எழுதி ஒட்டப்பட்டிருந்த துண்டுச்சீட்டு தகவல் சொன்னது.

இதைக்கண்டு ஷெரீப் கான் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே அருகில் தன்னுடன் இருந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம், “இந்தப் பையில் இருப்பது எனது சகோதரியின் உடல் அல்ல” என்று ஷெரீப் கான் தெரிவித்தார். உடனே அவர்கள் அந்த உடலை எடுத்துக்கொண்டு, “நாங்கள் உங்கள் சகோதரியின் உடலுடன் திரும்ப வருகிறோம்” என்று கூறிச்சென்றனர்.

ஆனால் போனவர்கள் போனவர்கள்தான். மாலை 4 மணி வரை காத்திருந்தும், பல முறை செல்போனில் தொடர்பு கொண்டும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் “இதோ வருகிறோம், வருகிறோம்” என சாக்கு சொல்லிக்கொண்டிருந்தனர். வரவே இல்லை. கடைசியில் ஷெரீப்கானும், அவரது குடும்பத்தினரும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து விட்டு போலீசில் புகார் செய்தனர்.

நடந்தது என்ன என்பதை ஷெரீப் கான் கண்ணீரோடு பகிர்ந்து கொள்கிறார் இப்படி… எனது சகோதரியின் உடல் எங்கே என்று கேட்டபோது, அவரது உடலை குசும்லதா குடும்பத்தினர் பஞ்சாப் பாக் தகன மையத்துக்கு எடுத்துச்சென்று தகனம் செய்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தாயின் முகத்தை கடைசி முறையாக பார்த்துக்கொள்ளட்டும் என்று என் சகோதரியின் மகளையும், மகனையும் பரேலியில் இருந்து அழைத்து வந்தோம். ஆனால் யாருமே பார்க்க முடியாமல் போய்விட்ட கொடுமையை என்னவென்பது? இப்படி அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் பிணவறையில் பணியாற்றும் ஊழியர்களின் கவனக்குறைவும், அலட்சியப்போக்கும் அஞ்சூமின் உடலை, இந்துப்பெண்ணான குசும்லதா உடல் என நினைத்து மாற்றி ஒப்படைத்துவிட, நல்லடக்கம் செய்ய வேண்டிய உடலை, குசும்லதா குடும்பத்தினர் தகனம் செய்த கொடுமை அரங்கேறி விட்டது. உடல் மாறாட்டம் நடைபெற்றதற்கு காரணமான எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பிணவறை ஊழியர்கள் 2 பேரில், ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மூத்த டாக்டர் ஒருவர் தெரிவித்தார். கண்ணீரும் கம்பலையுமாக ஷெரீப் கான் குடும்பம் பரேலிக்கு புறப்பட்டது, கனத்த இதயத்தோடு.