நாட்டை முடக்கும் அவசியம் இல்லை!

நாட்டில் முடக்க நிலையை அறிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரந்தளவில் காணப்படவில்லை என்றும் சில பகுதிகளில் மத்திரம் காணப்படுகிறது. என்றும், அவர் குறிப்பிட்டார்.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் பணியாற்றும் ஒருவர் மூலமாக ராஜாங்கனை பகுதியில் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அங்கு சில இடங்கள் மாத்திரம் முடக்கப்பட்டுள்ளன என்றும் மருத்துவர் அனில் ஜாசிங்க கூறினார்.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இதுவரை 534 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த முகாமில் இருந்து சென்றவர்களின் மூலம் வெளியே சமூகத்தில் 25 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

ராஜாங்கனை மற்றும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் தொடர்ந்தும் பிசிஆர் சோதனைகளை நடத்தி வருவதாகவும், கந்தகாட்டில் 3000 பிசிஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் மருத்துவர் அனில் ஜாசிங்க மேலும் கூறினார்.

கொரோனா தொற்றாளர்களை கண்டுபிடிக்க புலனாய்வுப் பிரிவுகள் நாடு முழுவதும்,கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள போதிலும், நாடெங்கும் தொற்று பரவியிருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!