அரசியல் கைதிகள் விடுதலைக்கு கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை!

??????????????????????????????????????????????????????????
கடந்த நான்கரை வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் உருவான அரசாங்கத்துடன் இணக்க அரசியலைச் செய்து வந்த கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த விதமான பலமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் காலத்தைக் கடத்திவிட்டது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உடுத்துறை பகுதியில் நேற்று நடைபெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”தற்போதைய தேர்தல்க் காலத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதும் கண்துடைப்பு வேலைகளையே செய்து வருகின்றார்கள். இவர்கள் நினைத்திருந்தால் நாடாளுமன்றத்தில் இருந்து பேரம் பேசவேண்டிய நேரத்தில் பேரம் பேசி எங்கள் அரசியற் கைதிகளை விடுவித்திருக்கலாம்.

அத்துடன் தற்போதும் கூட தொடர்ந்துவரும் அரசாங்கங்கள் தமிழ் அரசியற் கைதிகளைப் பணயக் கைதிகளாகவே வைத்துக் கொண்டு வருகின்றன. சிங்களப் போர்க் குற்றவாளிகளைக் கைதில் இருந்து தப்ப வைக்க, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் நடைபெறாதிருக்க, மேற்படி தமிழ் அரசியற் கைதிகளைப் பணையமாகப் பாவிக்கவே அவர்களைத் தொடர்ந்தும் சிறையில் வாட வைத்திருக்கின்றார்கள்.

ஆகவே நாம் தேர்நதெடுக்கப்பட்டால் சட்ட ரீதியாக கட்டமைப்புக்களை உருவாக்கி செய்யக்கூடிய எல்லா வழிமுறைகளையும் நாம் பரிசீலித்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதேசமயம் ஜனாதிபதியுடன் இவர்களின் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

முக்கியமாக தெரிவுசெய்யப்படும் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ. நா, சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், இந்திய அரசு ஆகியவற்றுடன் இது விடயத்தில் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தி அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்போம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் வகையில் கடந்த 11 வருடங்களாக அவர்களின் உறவுகள் போராடிவருகின்றனர். அவர்களையும் உள்ளடக்கிப் போராட்டங்களை நிலத்திலும் புலத்திலும் விரிவுபடுத்தி போராட்ட வடிவங்களையும் விரிவுபடுத்தி செயற்படுவோம்.” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!