தமிழர் எதிர்பார்க்கும் தீர்வுக்கு ராஜபக்ச அரசில் இடமில்லை!

தமிழ் மக்களோ அல்லது சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ விரும்புகின்ற தீர்வை அரசு வழங்கமாட்டாது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

‘தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜைகள். எனவே, தமிழர்களுக்கான உரிமைகளை, அரசியல் தீர்வை அரசு வழங்கியே ஆகவேண்டும். அது அரசின் கடமையாகும். அதற்காக அரசிடம் நாம் அடிபணியமாட்டோம். தமிழ் மக்கள் விரும்பும் நியாயமான தீர்வை வழங்க அரசு முன்வந்தால் அதை நாம் மனதார ஏற்போம்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ராஜபக்ச அரசின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெலவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “தமிழர்களும் இந்த நாட்டின் பிரஜைகள். முஸ்லிம்களும் இந்த நாட்டின் பிரஜைகள். சிங்களவர்களும் இந்த நாட்டின் பிரஜைகள். எனவே, எமது புதிய ஆட்சியில் தமிழர்களுக்கெனத் தனியான அரசியல் தீர்வை எம்மால் வழங்க முடியாது.

தமிழ் மக்களோ அல்லது சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ விரும்புகின்ற தீர்வையும் எம்மால் வழங்க முடியாது.

தமிழ் – முஸ்லிம் – சிங்களம் என மூவின மக்களுக்கும் உரித்தான தீர்வை மட்டுமே எம்மால் வழங்க முடியும். நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு அங்கீகாரத்துடனேயே இந்தத் தீர்வை வழங்குவோம்.

‘அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான தீர்வு’ என்று சம்பந்தன் கேட்பது சமஷ்டி தீர்வே. இந்த சமஷ்டி தீர்வுக்கு ராஜபக்ச அரசில் இடமேயில்லை” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!