குருபரன் மீதான நடவடிக்கை அழிவின் ஆரம்பப் புள்ளி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டத்துறை தலைவரும் முதுநிலை விரிவுரையாளருமான குருபரன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை அழிவின் ஆரம்ப புள்ளியாகவே பார்க்கிறோம் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டத்துறை தலைவரும் முதுநிலை விரிவுரையாளருமான கு.குருபரன் மீதான நடவடிக்கை தொடர்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியத்தினர் நேற்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.

இங்கு கருத்து வெளியிட்ட, மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவை அரச, இராணுவ பரிந்துரைகளுக்கும் புலனாய்வுக் கட்டமைப்புக்களின் தேவைக்கும் ஏற்பவே செயற்படுகிறது என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தற்போது சுயாதீனத்தை இழந்து நிற்பதாகவும் குற்றம்சாட்டினர்.

அரசியல் தலையீடுகள், இராணுவத் தலையீடுகள் மற்றும் புலனாய்வுக் கட்டமைப்புகளால், பல்கலைக்கழகத்தின் புலமை சார்ந்த சுயாதீனம் பறிக்கப்படுவது குறித்தும் அவர்கள் கண்டனம் வெளியிட்டனர்.

இவ்வாறான நிலை மாற்றப்பட வேண்டும் என்றும், முதுநிலை விரிவுரையாளர் குருபரனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், அனைத்து பீட மாணவர் ஒன்றியத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

நீதிமன்றில் வழக்காடுதல் அல்லது விரிவுரையாளராகப் பணியாற்றுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டும் செய்ய வேண்டும் என்று அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை நீக்கப்பட்டு இரண்டு செயற்பாடுகளையும் அவர் ஆற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ஒரு சமூக நிறுவனம் என்றும், சமூகத்தூடே ஊடாட்டத்தை ஏற்படுத்துவதற்கு பல்கலைக் கழகத்துக்கு கனதியான பங்கு உள்ளதாகவும் அனைத்து பீட மாணவர் ஒன்றியத்தினர், குறிப்பிட்டனர்.

தற்போது குருபரன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை அழிவின் ஆரம்ப புள்ளியாகவே பார்க்கிறோம் என்றும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!