அமெரிக்காவில் 53 வயது நபரை மிருகத்தனமாக தாக்கி கையை உடைத்த பொலிஸார்!

பணியில் சேரும்போது மக்களை காப்பாற்றுவோம் என உறுதிமொழி எடுத்ததை மறந்துவிட்டீர்களா என பொலிசாரைப் பார்த்துக் கேட்டவர்களை, பொலிசார் அடித்துக் கையை உடைக்கும் வீடியோ ஒன்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பொலிசாரால் கருப்பினத்தவரான ஜார்ஜ் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 51ஆவது நாளாக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், போர்ட்லாண்ட் என்ற இடத்தில் அமைதியான முறையில் பேசச் சென்ற முன்னாள் கடற்படைவீரரான Chris David (53) என்பவரை பொலிசார் கடுமையாக தாக்கியுள்ளார்கள்.

இத்தனைக்கும் அவர் கடற்படை என எழுதப்பட்ட சட்டை, தொப்பி அணிந்திருந்திருக்கிறார். வெளியாகியுள்ள வீடியோவில், ஒரு கூட்டம் பொலிசாரை நெருங்கி, ஏன் அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுகிறீர்கள், பொலிசாராக பணியேற்றபோது மக்களை காப்போம், மக்களுக்கு சேவை செய்வோம் என எடுத்துக்கொண்ட உறுதிமொழியை ஏன் கௌரவிக்கமாட்டேன்கிறீர்கள் என சத்தமிட்டுள்ளார் David. உடனே ஒரு பொலிசார் தனது லத்தியை அவரை நோக்கி நீட்டி மிரட்ட, மற்ற பொலிசார் அவரைப் பிடித்து தள்ளுகிறார்கள்.

தடுமாறி விழ இருந்த David சமாளித்துக்கொண்டு அவர்களை நோக்கி முன்னேற, ஒரு பொலிசார் லத்தியை எடுத்து மிருகத்தை அடிப்பதுபோல் கொஞ்சமும் ஈவிரக்கமில்லாமல் அடிக்கிறார். அடி வாங்கியும் David அசையாமல் நிற்பதைக் கண்ட பொலிசார் வெறிகொண்டவர்கள் போல் அவரைத் தாக்குவதோடு, அவர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடிக்க, சரியாக பார்க்க முடியாமல் தடுமாறும் அவர் சட்டென திரும்புகிறார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Davidக்கு எக்ஸ்ரே எடுத்தபோது, அவரது கைகளில் இரண்டு இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்ததையடுத்து, ஸ்குரூவும், தகடுகளும் பொருத்தப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களில் வெளியான இந்த வீடியோ மக்களை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளது. 11 மில்லியன் பேர் பார்வையிட்ட அந்த வீடியோ குறித்த செய்தி வெளியானதும் பதறிப்போய் ட்ரம்பே ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில், நாங்கள் போர்ட்லாண்டுக்கு உதவத்தான் விரும்புகிறோம், காயப்படுத்த அல்ல, நாம் நமது சொத்துக்களையும் நமது மக்களையும் பாதுகாக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார் ட்ரம்ப். உண்மையில், போராட்டத்தின்போது, ஒரு கூட்டம் தாய்மார்கள், கர்ப்பிணிகள் உட்பட, கைகோர்த்து நின்றபோது, கொஞ்சமும் ஈவிரக்கமின்றி அவர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகையை பிரயோகித்தபின்புதான் பிரச்சினை பெரிதாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!