கடத்தி கொல்லப்பட்டதாக கூறப்படும் பிரித்தானிய சிறுமியை நேரில் பார்த்ததாக அதிர்ச்சி தகவலை கூறிய போர்த்துகல் பெண்!

ஜேர்மானியர் ஒருவரால் கடத்தி கொல்லப்பட்டதாக கூறப்படும் பிரித்தானிய சிறுமியை தாம் நேரில் பார்த்ததாக போர்த்துகல் பெண் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். போர்த்துகல் செய்தி ஊடகம் ஒன்றில் சாட்சியம் அளித்த குறித்த பெண், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அல்கார்வேயில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மேடலின் மெக்கனைப் பார்த்ததாக தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு மேடலின் மாயமான நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், 2017 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்ததாக கூறும் அவர், முதலில் தமக்கு அந்த சிறுமியை அடையாளம் காண முடியவில்லை எனவும், பின்னர் பல முறை யோசித்த பின்னரே, தமக்கு நினைவுக்கு வந்தது எனவும், ஆனால் அவர்கள் அங்கிருந்து வெளியேறி பல மணி நேரத்திற்கு பின்னரே தமக்கு அது மேடலின் என்பது நினைவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

போர்த்துகலில் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றும் மரியா என்பவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அல்கார்வேயில் உள்ள அல்புஃபைராவுக்கு அருகிலுள்ள அப்போலோனியா சூப்பர் மார்க்கெட்டில் பணம் செலுத்தும் பகுதியில் மேடலினை பார்த்ததாக மரியா கூறுகிறார். மேலும் அவருடன் இருந்த ஆணிடம் மேடலின் ஜேர்மன் மொழி பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல்கள் தமக்கு ஞாபகம் வர காரணம், ஜேர்மானியரான Christian B Rückner தொடர்பில் சமீப நாட்களாக செய்திகளில் விவாதிக்கப்படுவதே என்றார். மட்டுமின்றி, இந்த தகவல்களை தாம் பொலிசாரிடமும் தெரிவித்துள்ளதாக கூறும் மரியா, அவர்களுக்கு இது நம்பும் படியாக இல்லை என நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு போர்த்துகலுக்கு பெற்றோருடன் சுற்றுலா சென்றபோது 3 வயதேயான மேடலின் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் இருந்து மாயமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!