சஜித்தின் வசமிருந்த மத்திய கலாசார நிலையத்தில், 11 ஆயிரம் மில்லியன் ரூபா மோசடி!

சஜித் பிரேமதாசவின் அமைச்சின் கீழ் இயங்கிய மத்திய கலாசார நிலையத்தில், 11 பில்லியன் ரூபா தவறான முறையில் கையாளப்பட்டுள்ளதாக, விசாரணை அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு நேற்று சமர்ப்பித்த அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டுக்கும், 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், மத்திய கலாசார நிலையத்தினால் இந்த நிதி தவறாக கையாளப்பட்டுள்ளதாக விசாரணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2019 ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மத்திய கலாசார நிதியத்தின் 400 மில்லியன் ரூபா பணம், முறையற்ற வகையில் பெறப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.

நிலையான வைப்பிலிடப்பட்டிருந்த இந்த நிதி மீளப் பெறப்பட்டதால், 2,608 மில்லியன் ரூபா வட்டி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விசாரணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொல்பொருள் நம்பிக்கை பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட 2266 மில்லியன் ரூபா ஏ னைய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

நிதிக் கோவைகளுக்கு முரணாக வழங்கப்பட்ட நன்கொடைகளால் 2316 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட வெற்றிடங்களுக்கு மேலதிகமாக ஆட்கள் பணியில் அமர்த்தப்பட்டதால், 3060 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

இதன்படி 2016இற்கும் 2019இற்கும் இடைப்பட்ட காலத்தில் மத்திய கலாசார நிதியத்தின் 11,059 மில்லியன் ரூபா நிதி தவறாக கையாளப்பட்டுள்ளது என்றும் விசாரணைக்குழு கண்டறிந்தள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!