ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பரோல் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய குழு முன் அமர்வு நடைபெற்றது. அப்போது பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி, ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தார்கள்.

மேலும் பரோல் தொடர்பாக என்ன முடிவு எடுத்துள்ளீர்கள் என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.

பரோல் குறித்து மனு அளித்து கிட்டத்தட்ட 4 மாதங்களாகிவிட்டது. ஏன் இன்னும் முடிவெடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரிகளுக்கு அபராதம் விடுகாட்டும்மா? என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் தாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல 7 பேர் விடுதலை தொடர்பாக அதிருப்தி தெரிவித்ததையும் சுட்டிக்காட்டினார்கள். அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததை ஆளுநரிடம் தெரிவித்து, ஏன் இவ்வளவு காலதாமதம் என்று கேள்வி எழுப்பி அதற்கான கடிதம் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஆளுநர் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் வந்ததாகவும், அந்த கடிதத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக ஜெயின் கமிஷனால் அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை குழு ஆணையத்தினுடைய விசாரணை இன்னும் நிறைவடையாததால் அந்த அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பரோல் தொடர்பாக திங்கட்கிழமை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!