மல்லாகத்தில் நேற்றிரவு பதற்றம் – பொதுமக்கள் கொந்தளிப்பு

மல்லாகத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மரணமான இளைஞன், தேவாலய விழாவில் பங்கேற்ற அப்பாவி என்று, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவுக்குப் பின்னரும் பதற்ற நிலை காணப்பட்டது.

மல்லாகம் சந்திக்கு அருகேயுள்ள சகாயமாதா தேவாலயத்தில் நேற்று மாலை நடந்த விழாவில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் வெளியில் இருந்து வந்த சிலர் குழப்பம் விளைவிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, ஆலயப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அதனைத் தடுக்க முற்பட்டனர். அந்த நிலையில் அங்கு வந்த சுன்னாகம் காவல்துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மல்லாகத்தைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்சன் (வயது 32) என்ற இளைஞன் மரணமானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

இவர் குற்றச்செயல்களில் ஈடுபடாத அப்பாவி என்றும், காவல்துறையினர் திட்டமிட்டு துப்பாக்கிச் சூட்டை நடத்தினர் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி, காங்கேசன்துறை வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை, காவல்துறையினரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்ட போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே குறித்த இளைஞன் பலியானார் என்றும் மற்றொருவர் காயமடைந்தார் என்றும் சிறிலங்கா காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இரவிரவாக வீதியை மறித்துப் பொதுமக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் பெருந்தொகையான காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

மல்லாகம் நீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதுடன், சம்பவம் நடந்த போது அங்கிருந்த பொதுமக்களையும் சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்தார்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களையும் அமைதிப்படுத்தினார்.

விசாரணைகளை அடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சிறிலங்கா காவல்துறை அதிகாரியை கைது செய்யவும் மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டார்.

எனினும், தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று கோரியும், சிறிலங்கா காவல்துறையினரைக் கண்டித்தும் நள்ளிரவுக்குப் பின்னரும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!