நடுரோட்டில் ரத்தம் சொட்ட சொட்ட சுத்தியால் தாக்கப்பட்ட இளைஞன்: வேடிக்கை பார்த்த பொலிஸ்!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி இளைஞர் ஒருவரை பசு பாதுகாவலர்கள் சுத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ரத்தம் சொட்ட சொட்ட அடித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகே குர்கானிலே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. லுக்மேன் என்ற இளைஞரே பயங்கர தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். லுக்மேன் வேனில் இறைச்சி எடுத்து செல்வதை கண்ட பசு பாதுகாவலர்கள், அவர் மாட்டிறைச்சி எடுத்துச் செல்வதாக சந்தேகமடைந்து அவரது வேனை விரட்டிச்சென்ற வழிமறித்துள்ளனர்.

பின் லுக்மேனை நடுரோட்டில் போட்டு சுத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ரத்தம் சொட்ட சொட்ட சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள் தங்களது போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பொலிசாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. பின் அந்த கும்பல் லுக்மேனை வாகனத்தில் தூக்கிச்சென்ற பாட்ஷாபூர் கிராமத்திற்கு கொண்டு சென்று மீண்டும் சரமாரியாக அடித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் லுக்மேனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். லுக்மேன் உடல்நிலை குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. இறைச்சியை ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர், மேலும் லுக்மேனை தாக்கிய கும்பலை சேரந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

லக்மேன் வேனில் எருமை இறைச்சியை தான் கொண்டு சென்றார் என அவரது முதலாளி தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சிறுபான்மையினர் தாக்கப்படுவாது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!