கொரோனாவை தொடர்ந்து கனமழையால் பரிதவிக்கும் மும்பை!

மராட்டிய மாநில தலைநகர் மும்பையின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டியது. காலையும் பல்வேறு இடங்களில் மழை நீடித்து வருகிறது. விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் மும்பையின் முக்கிய இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்காக இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவசர சேவைகளில் செயல்படும் அரசு அலுவலங்களை தவிர ஏனைய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் மிக மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தானே, புனே, ராய்காட், ரத்னகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!