நல்லாட்சி அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட நபர்களை முழு நாடும் நிராகரித்துள்ளது- பிரசன்ன ரணதுங்க?

நல்லாட்சி அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட நபர்களை முழு நாடும் நிராகரித்துள்ளதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொற்றிக்கொண்டவர்கள் மாத்திரம் தப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சரவையின் எண்ணிக்கை 25 முதல் 26 ஆக குறைக்கப்பட உள்ளது. ஜனாதிபதி சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியுள்ளதாகவே நான் நினைக்கின்றேன்.

நாட்டு மக்களின் நம்பிக்கையை மேலும் வென்றெடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிந்து போயுள்ளது.

எங்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களே தற்போது எஞ்சியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியும் அழிந்து போயுள்ளது.

சஜித்தும் ரணிலும் பிளவுப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கடந்த முறையை விட இம்முறை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நல்லாட்சியுடன் இருந்தவர்களை முழு நாடும் நிராகரித்துள்ளது.

எங்களுடன் தொற்றிக்கொண்டவர்கள் மாத்திரம் தப்பித்துள்ளனர். ஜனாதிபதியின் சௌபாக்கிய நோக்கு கொள்கை திட்டத்தை அமுல்படுத்த அரசியலமைப்புத் திருத்தம் ஒன்று செல்ல வேண்டும்.

அதனை செய்ய எதிர்பார்த்துள்ளோம். 19வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும். அத்துடன் நாட்டுக்கு கெடுதியான உடன்படிக்கைகளை எப்படி இரத்துச் செய்வது என்ற விடயமும் நடக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!