“ஜனாதிபதியின் கருத்து நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவமதிப்பதாகவே உள்ளது”

பிணைமுறி விவகாரத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது இலகுவான விடயமல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை அவமதிப்பதாகவே அமைகிறது என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கியின் பிணைமுறி விவகார மோசடியில் தொடர்புப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளுக்கு தண்டனை வழங்குவது இலகுவான விடயமல்ல என்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி குறிப்பிடுவது அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தினை அவமதிப்பதாகவே அமைகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டதன் பின்னர் அரசியல் தலைவர்கள். இந்த விசேட அதிகாரத்தினை ஒரு கேடயமாகவே பயன்படுத்தினார்கள். ஆனால் தேசிய அரசாங்கத்தில் இப்பதவி 1972 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் காணப்பட்ட ஜனாதிபதியின் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டாலும். அந்த அதிகாரம் நடைமுறையில் இருக்கும் வரை அதனை மதித்து செயற்படுத்த வேண்டும்.

பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழு வழங்கிய அறிக்கையினை பாராளுமன்றத்திற்கு முழுமையாக சமர்ப்பிப்பதில் அரசாங்கம் தொடர்ந்து காலதாமதத்தினை ஏற்படுத்தி வருகின்றது.

பிணை முறி விவகாரத்தில் தனது பொறுப்புக்களை முழுமையாக நிறைவேற்றி விட்டேன் என ஜனாதிபதி ஒரு போதும் குறிப்பிட முடியாது. ஏனெனில் நாட்டு தலைவர் என்ற ரீதியில் பிணைமுறி விவகாரத்திற்கு அவரே முழுமையான பொறுப்புக்களையும் ஏற்க வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!