தனி ஆளாக கேரளாவில் பெண் செய்த துணிச்சலான செயல்: குவியும் பாராட்டுக்கள்!

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களில் ரூ.100 இருந்ததால் மக்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப் போயினர். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களிலும் வெள்ளம், மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது மேலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் எர்ணாகுளம் கும்பலங்கி கிராமத்தை சேர்ந்த மேரி எனும் பெண் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நினைத்தார்.

இவரது கணவர் ஏற்கனவே வேலையை இழந்த நிலையில், வெறும் 15 நாட்கள் மட்டுமே மேரி வேலைக்கு சென்றுள்ளார். இந்த பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நினைத்த மேரி, யாருக்கும் தெரியாமல் உணவுப் பொட்டலங்களுக்குள் வைத்து கொடுத்துள்ளார். அத்துடன் தனது வீட்டில் தயாரிக்கும் உணவுப் பொட்டலங்களுடன் மட்டும் இல்லாமல் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று உணவுப் பொட்டலங்களைச் சேகரித்துப் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியையும் செய்துள்ளார்.

இதுகுறித்து மேரி கூறுகையில், என்னால் முடிந்த மிகச்சிறிய அளவில் மக்களுக்கு உதவ நினைத்தேன். எனக்கு அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. இங்கு கடுமையான குளிர் நிலவி வருவதால் பலரும் டீ குடிப்பர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் வைத்த பணம் டீ குடிக்கவாவது உதவும் என்று நினைத்தேன். உணவுப் பொட்டலத்துக்குள் நூறு ரூபாய் வைத்தது நான் தான் என்று யாருக்கும் தெரியவேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், இப்போது அனைவருக்கும் தெரிந்துவிட்டது என நெகிழ்கிறார். இந்நிலையில் இவரது மனிதாபிமானத்தை பாராட்டி பலரும் பரிசுகளை வழங்கி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!