மருத்துவரின் வீடு தேடி வந்த முதலமைச்சரின் விருது: நெகிழ்ச்சி சம்பவம்!

விருதுநகர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கு முதலமைச்சரின் விருது தேடி வந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரிவில் டாக்டராக பணியாற்றுபவர் உமாமகேஸ்வரி (வயது 41). முதுநிலை மருத்துவரான இவர், அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு மருத்துவ பிரிவு முழுமையாக கொரோனா வார்டாக மாற்றப்பட்ட பின்னரும் அந்த வார்டிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறார். பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கொரோனா பாதிப்புக்குள்ளான 30 பேருக்கு பாதிப்பில்லாமல் குழந்தைகள் பிறக்க சிகிச்சை அளித்ததுடன் தாயையும்- சேயையும் பாதுகாத்தார்.

இந்நிலையில் உமா மகேஸ்வரிக்கு முதலமைச்சரின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்டர் உமாமகேஸ்வரி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:- விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவினை முழுமையான கொரோனா வார்டாக மாற்ற நடவடிக்கை எடுத்த கலெக்டர் கண்ணனுக்கும், சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மனோகரனுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.

இதன் மூலமே கொரோனா பாதிப்பு அடைந்த கர்ப்பிணிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க முடிந்தது. நான் மட்டும் 30 கர்ப்பிணிகளுக்கு கொரோனாவில் இருந்து விடுபட சிகிச்சை அளித்ததுடன் நோய்பாதிப்பு ஏற்படாமல் குழந்தை பிறக்கவும் நவீன சிகிச்சை அளித்தேன் என்னுடன் டாக்டர்கள் பிச்சைக்காளி, முனிரா, ஆயிஷாகனி ஆகியோரும் இப்பிரிவில் பணியாற்றி, கொரோனா பாதித்த கர்ப்பிணிகள் நோய்பாதிப்பில் இருந்து மீள்வதற்கு சிகிச்சை அளித்தனர்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பெண்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததால்தான் நானும் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க முடிந்தது. அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதல்-அமைச்சர் அறிவித்துள்ள விருது தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது.

நோய் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் எனது குடும்பத்தினர் என்னை தொடர்ந்து கொரோனா வார்டில் பணியாற்ற அனுமதி அளித்து ஊக்கப்படுத்தியதற்காக அவர்களுக்கும் எனது நன்றி. அரசும், மாவட்ட நிர்வாகமும் கொரோனா வார்டில் நாங்கள் முழு பாதுகாப்போடு பணியாற்ற தேவையான ஏற்பாடுகளை செய்து தந்தது. அதன் மூலமே நாங்களும் ஈடுபாட்டோடு பணியாற்ற முடிந்தது என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!